Thursday 10 July 2014





காரைக்கால் வளம் பெருகும் சோழ நாட்டிலே உள்ள ஒரு திருநகரம். இந்நகரில் காரைக்கால் அம்மையார் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் புனிதவதி. விளையும் பயிர் முளையிலே தெரியும் என்பது போல் புனிதவதியார் மழலை மொழி பேசும்போதே சிவனடியாரிடம் அளவு கடந்த அன்புடையவராய் இருந்தாள். புனிதவதியாரின் பிஞ்சு மனத்திலே அரவணிந்த அண்ணலின் அருள் தோற்றம் பக்திப் பெருக்கோடு பதிந்து விட்டது. புனிதவதி காணுவதெல்லாம் கண்ணுதலார் தோற்ற பொலிவையே! திருவாய் மலர்ந்து செப்புவது அனைத்தும் செஞ்சடையான் திருநாமமே! இளமை முதற்கொண்டே பரமனின் பாதங்களி‌ல் பற்றுடையவளாய் வளர்ந்து வந்த புனிதவதி மங்கைப் பருவம் எய்தினாள். மங்கைப் பருவம் கொண்ட அம்மையாரை நாகப்பட்டிணத்தில் வசித்து வந்த பரமதத்தன் என்ற வணிக குல மகனுககுத் திருமணம் செய்து வைத்தார் தனதத்தனார். திருமணம் முடிந்த பிறகு தனதத்தனுக்குத் தன் மகளை நாகைக்கு அனுப்ப மனம் ஒப்பவில்லை. புனிதவதி தனது ஒரே மகள் ஆகையால் அவளைப் பிரிய மனம் இல்லாமல் வருந்தினார். தனதத்தன் மகளையும், மருமகளையும் காரைக்காலில் தனியாக ஒரு இல்லத்தில் வாழ வைத்தார். காரைக்காலிலே தனிக்குடித்தனம் வைக்கப்பட்ட இவ்வில்லறச் செல்வர் மøனயறத்தை மாண்புற மேற்கொண்‌டனர். அவர்கள் இல்லற‌ெமென்னும் நல்லறமதை இனிதே நடத்தி வந்தனர். அத்தோடு கூட பரமதத்தன் வணிகத் தொழிலைப் பண்போடும் நேர்மையோடும் நடத்தி வந்தான். புனிதவதி இறைவனிடம் கொண்டுள்ள பக்தி நாளுக்கு நாள் வளர்ந்து வந்தது. எந்நேரமும் சிவனடியார் திருநாமத்தைப் போற்றி வழிபடுவதிலேயே இருந்தாள். ஒருநாள் பரமதத்தன் கடையில் இருக்கும்பொழுது, அன்புடைய ஒருவர் இரண்டு மாங்கனிகளைக் கொடுத்துச் சென்றார். பரமதத்தன் அம் மாங்கினிகளை ஆள் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். புனிதவதி அந்த இரண்டு மாங்கனிகளையும் வாங்கி வைத்துக் கொண்‌டாள்.
புனிதவதி பிற்பகல் உணவிற்கான ஏற்பாட்டைச் செய்து கொண்டிருந்தாள். அதுசமயம் வாயிற்புறமிருந்து சிவாய நம என்று குரல் கேட்டது. புனிதவதி, வாயிற் பக்கம் விரைந்து வந்தாள் சிவன் அடியார் நிற்பதைக் கண்டாள்; அன்போடு அவரை வரவேற்றாள். அடியார் உணவில் மிக்க வேட்டையுடைவராய் இருந்தார், பசியால் வாடும் அடியார் முகத்தோற்றத்தைக் கண்டு மனம் வாடிய புனிதவதி சற்றும் தாமதியாமல் அடியார் பசியைப் போக்க எண்ணினாள். விரைவில் சாப்பாடும் செய்தாள். புனிதவதி அடியார் திருப்பாதம் விளக்க நீர் அளித்து அமர ஆசனமும் இட்டாள். தொண்டரும் திருவமுது செய்ய அமர்ந்தார். இலையில் பக்குவமாகச் சமைத்த சோற்றை மட்டும் பறிமாறி மாம்பழங்களில் ஒன்றை கறியமுதிற்குப் பதிலாக இட்டாள். பசியால் தள்ளாடி வந்த தொண்டருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவர் திருவமுதை வயிறார உண்டு, புனிதவதியை வாயார வாழ்த்திப் பசியாறிச் சென்றார். அடியார் சென்ற சற்று நேரத்திற்கெல்லம் வழக்கம்போல் பரமதத்தன் நண்பகல் உணவிற்காக வீட்டிற்கு வந்து சேரந்தான். கை கால் கழுவி சுத்தம் செய்து கொண்டு அமுது உண்ண அமர்ந்தான். புனிதவதி முறையோடு அமுது படைத்தாள். பிறகு கணவருக்கு மீதி இருந்த மாங்கனியையும் அரிந்து பரிகலத்தில் போட்டாள். பரமதத்தன் மதுரம் வாய்ந்த அம்மாங்கனியை உண்டவுடன் அதன் இனிமை கண்டு மற்றொன்றையும் உண்ணக் கருதி அதையும் இலையில் இடுக என்று பணித்தான், கணவனின் கட்டளை கேட்டு, புனிதவதிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை, ஒரு வினாடியில் உளம் தடுமாறிப் போனாள். இருப்பினும் கனியெடுத்து வருபவள் போல் உள்ளே சென்றாள். பாவம் ! என்ன செய்வாள் ? அகத்துள் மாம்பழம் இருந்தால்தானே !  செய்வதறியாது மனங்கலங்கனாள். இறுதியில் வழியொன்றும் தோன்றாது, அரனாரை வேண்டினாள். அப்போது இறைவனின் திருவருளால் அதி மதுரக்கனி ஒன்று அம்மையாரின் கைகளில் வந்து தங்கியது. தனக்காக திருவருள் புரிந்த அரனாரை மனதில் தியானித்தபடியே மாங்கனியைக் கொண்டு வந்து கணவன் இலையில் பறிமாறினாள். அதனையுண்ட பரமதத்தன் முன் உண்ட கனியை விட இக்கனி தனிச்சுவையுடன் இருக்கக் கண்டு புனிதவதி ! இக்கனி, அமுதத்தைப் போன்ற சுவையுடையதாக இருக்கிறதே. தேவர்களுக்கும் , மூவர்களுக்கும் கிட்டாத கனிபோல் அல்லவோ தோன்றுகிறது இஃது ஏது உனக்கு? என்று  கேட்டான். இறைவனின் சோதனைக்கு அடியவர்கள் ஆளாவது போல் கணவனின் சோதனைக்குப் புனிதவதி ஆளாயினாள்.
இறைவன் அருள் பெற்று இக்கனியைப் பெற்றேன் என்று செப்புவதற்குத் திறனற்ற நிலையில் புனிதவதி, உண்மையை எப்படி உணர்த்துவது ? என்பதையும் புரிந்துகொள்ள முடியாமல் மனம் வாடினாள். ஆயினும் கணவனிடம் உண்மையை மறைப்பது கற்புடைய பெண்டிர்களுக்கு முறையல்ல என்பதையும் எண்ணி்ப் பார்த்தாள். இறுதியில் இறைவனுடைய செஞ்சேவடிகளைச் சிந்தையில் எண்ணியவளாய் கணவரிடம், இம்மதுர மாங்கனி இறைவன் திருவருளால் கிடைத்தது என்று கூறினாள். பரமதத்தன் வியப்புற்றான். புனிதவதி அடியார் வந்தது முதல் சற்றுமுன் தனக்கு மாங்கனி கிடைத்ததுவர‌ை நடந்த அத்தனை நிகழ்சிகளையும் ஒன்றுவிடாமல் விளக்கினாள். புனிதவதி மொழிந்தவற்றைச் சற்றும் நம்பாத நிலையில் அங்ஙனமாயின் இதுபோல் இன்னும் ஓர் சுவையான மாங்கனியைப் பெற்றுத் தருக என்று பணித்தான் பரமதத்தன். புனிதவதி மீண்டும் உள்ளே செனறாள். பெருமானை தியானித்தாள். இறைவன் ! நீவிர், மற்றும் ஒரு மாங்கனியை அளித்து அருளி எம்மை ஆதரிக்காவிடில் என்னுரை பொய்யாகும் என்று பிரார்த்தித்தாள். இம்முறையும் மற்றொரு மாங்கனியை அளித்து அருள்புரிந்தார் எம்பெருமான். புனிதவதி மகிழ்ச்சியோடு மாங்கனியைக் கொண்டு வந்து கணவனிடம் கொடுத்தாள். வியப்பு மேலிட, மாங்கனியைப் பரமதத்தன் வாங்கினான். அக்கனி உடனே மாயமாக அனர் கையிலிருந்து மறைந்தது. அதைப் பார்த்ததும், பரமதத்தன் பயந்து நடுநடுங்கினான். தன் மனைவி புனிதவதி மனிதப் பிறவி அல்ல, தெய்வீகத தன்மை பொருந்தியவள் என்பதை உணர்ந்தான். சிந்தை மயங்கி செயலிழந்தான் பரமதத்தன். அக்கணம் முதல் தன் மனைவியைத் தாரமாக எண்ணவில்லை; தொழுவதற்குரியவளாய் மனதில் விரித்தான் பரமதத்தன் ! இறைவன் திருவருளைப் பெற்ற நீ தொழுதற்குரிய‌வளே! உன்னுடன் சேர்ந்து வாழ எனக்குத் தகுதி கிடையாது தனித்து வாழ்வதுதான் முற்றிலும் முறை என்றான். கணவனின் பேச்சைக் கேட்டு புனிதவதி வருந்தினாள். அவளுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இதனால் பரமதத்தனும் புனிதவதியும் வாழ்க்கையில் வேறுபடுத்தப்பட்டனர். புனிதவதி, உலகப் பற்றைத் துறந்து வாழும் பக்குவ நிலையைச் சிறுகக் சிறுக பெற்றாள். தெய்வ சிந்தனையிலே அழுந்தினாள். அக்காலத்தில் வணிகர்கள் கடல் கடந்து வாணிபம் செய்து பொருளீட்டி வருவது வழக்கம். பரமதத்தன் தன் உறவினர்களிடம, தானும் வெளியூர் சென்று பொருள் சேர்க்கப் போவதாகக் கூறினான். அவர்களும் அவனது மு‌யற்சிக்கு முழு ஆதரவு கொடுத்தனர். ஒருநாள் வாணிபத்திற்குரிய பொருளோடு மனைவியிடமும், மாமனிடமும் விடைபெற்றுப் புறப்பட்டான். கடல் தேவதையை வழிபட்டு கப்பலேறிச் சென்றான். வெளியூர் சென்ற பரமதத்தன் வாணிபத் தறையில் தனக்குள்ள தனித் திறமையால் ஓரிரு வாரத்துள் நிரம்பச் செல்வம் ‌சேர்த்துக் கொண்டு, பாண்டிய நாடு திரும்பினான். அவன் காரைக்காலுக்குச் செல்ல விரும்பாததால் பாண்டிய நாட்டிலுள்ள வேறு ஒரு பட்டனத்தில் தனது வாணிபத்தைத் ‌தொடங்கினான். அயல் நாட்டிலிருந்து தான் கொண்டுவந்த அளவற்ற பொருள்களை எல்லாம் அந்நகரிலேயே விற்றுப் பெருஞ்‌ செல்வந்தனான். பரமதத்தனின் செல்வச் சிறப்பையும், அழகின் மேம்பாட்டையும் உணர்ந்த அவ்வூரிலுள்ள வணிகன் ஒருவன் தனது புதல்வியை அவனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.
இரண்டாவது மனை‌வியோடு இன்பமாக வாழும்நாளில், அவன் மனைவி கருவுற்று ஒரு பெண மகவைப் பெற்றெடுத்தாள். அப்பெண்ணுக்கு பரமதத்தன் தான் மனத்தால் வழிபடும் புனிதவதியின் நாமத்தையே சூட்டி மகிழ்ந்தான், இவ்வாறு பரமதத்தனின் இல்லறவழி அமைய அவனுடைய முதல் மனைவியின் வாழ்க்கையோ அறவழி நின்றது. இறைவனை வழிபடுவதும், அடியார்களை வழிபடுவதுமாக புனிவதி வாழ்ந்து வந்தாள். பரமதத்தன் பண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, எப்படியோ சுற்றத்தார்கள் மூலம் புனிதவதிக்குத் தெரியவந்தது. சுற்றத்தார்கள் புனிதவதியை எப்படியும் பரமதத்தனோடு சேர்ப்பது என்று உறுதிகொண்டனர். ஒருநாள் மனையறம் புரிந்து வரும் மடந்தை புனிதவதியை சுற்றத்‌‌தார், இரத்தினம் இழைத்த அழகிய சிவிகையில் ஏற்றிக்கொண்டு பாண்டி நாட்டிற்குப் புறப்பட்டனர். ஊர்கள் பல கடந்து காடுகள் மேடுகள் பல தாண்டி ஆறுகள் பல கடந்து ஒருவாறு பாண்டி நாட்டை அடைந்து பரமதத்தன் வாழும் நகருள் நுழைந்தனர். அந்நகரில் ஊருக்கு வெளியே உள்ள ஒரு சோலை அருகே தங்கினர். புனிதவதி வந்திருக்குமு் செய்தியைப் பரமதத்தனுக்கு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். சற்றும் எதிர்பாராமல் தன் முதல் மனைவி இப்படி வந்ததும் பரமதத்தன் அஞ்சினான். ஒருவாறு மனதைத் திடப்படுத்தி கொண்டு, அவர்கள் என்னிடம் வரும் முன்பு அவர்கள் இருக்கும் இடத்திற்கு நான் செல்வேன் என்று கருத்தி்ல் கொண்டான். இரண்டாவது மனைவியுடனும், குழந்தைய புனிதவதியுடனும் புனிதவதி தங்கியுள்ள இடத்திற்குப் புறப்பட்டான் பரமதத்தன். புனிதவதி தங்கியிருக்கும் இடத்தை அடைந்த பரமதத்தன், விரைந்து சென்‌று மனைவி மகளுடன் புனிதவதியார் பாதங்களில், வீழ்ந்து வணங்கி எழுந்தான். அடி‌யேன் உமது திருவருளால் இனிது வாழ்கிறேன் இச்சிறு குழந்தைக்கு அம்மையாரின் திருநாமத்தையே சூட்டியிருக்கிறேன். அருள் புரிய வேண்டும் என்று கூறினான். கணவனின் செயல் கண்டு புனிதவதி அஞ்சி ஒதுங்கி நின்றாள். பரமதத்தனின் செயல்கண்டு திகைத்துப்போன சுற்றத்தார் அவனிடம், மனைவியின் காலடியில் விழக் காரணம் ‌என்னவென்று கேட்டனர். பெரியோர்களே! இவர் என் மனைவியாக இருக்கலாம். இன்று இவர்கள் மானிடப் பிறவியே அல்லர். அம்மையார் எல்லோராலும் தொழுதற்குரியவர். அதனால்தான் நான் தாள் பணிந்தேன். நீங்களும் பணிந்து போற்றுங்கள் என்றான். பரமதத்தன் மொழிந்‌ததைக் கேட்டு அனைவரும் திகைத்து நின்றனர். கணவனின் முடிவு புனிதவதியின் மனத்தில் பெரும் வேதனையைக் கொடுத்தது. அழகுத் திருமகளாய்  இளம் குன்றாத வடிவழகுப் பெண்ணாய்க் காட்சி அளித்த அம்மையார், அழகையும் இளமையையும் வெறுத்தார். ஒரு பெண் கணவனுக்காக மட்டும்தான் அழகோடும் இளமையோடும் வாழ வேண்டும் என்ற பெண்மை இயல்பினை உணர்ந்திருந்த புனிதவதி அக்கணமே இறைவனிடம், எம்பெருமானே ! அம்ப‌லவாணரே! என் கணவருக்காக இதுவரையில் தாங்கி நின்ற இந்த வனப்புமிகு ‌எழில் உடம்பு எனக்குத் தேவையில்லை. இவ்வடிவமைக்குப் பேய் வடிடு தந்து அருளுதல் வேண்டும என்று வேண்டியவாறு பரமனைத் துதித்தாள்.
இறைவன் புனிதவதி வேண்டி நின்றதுபோல் அவளுக்குப் பேய் வடிவைக் கொடுத்து அருளினார். புனிதவதியின் வனப்பு மிகுந்த தசைகள் மாயமாக மறைந்தன. எலும்பு போல் காட்சியளித்தாள். விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் பேய் வடிவைப் புனிதவதி பெற்றாள். பெண்ணாக நின்றவள் பேயாக மாறினாள். வணக்கத்திற்குரியவள் ஆனாள். அங்கு கூடி நின்ற சுற்றத்தார்களும், உறவினர்களும் அம்மையாரை வணங்கியவாறு  அங்கு நிற்பதற்கே அஞ்சினர். அம்மையார் பேய் உருக்கொண்டதோடு நல்ல தமிழ் புலமையும் பெற்றார்.           
                                             
                        காரைக்கால் அம்மையார் பேயுருவச் சிலை
அருட்கவியுமாக மாறினார். இறைவனின் அருளிலே பெற்ற பாப்பாடும் திறத்தால் அம்மையார் அருளிலே திவந்தாதியும், திரு இரட்டை மணிமாலை என்னும் திருப்பிரபந்தத்தையும் பாடினார். புனிதவதி, காரைக்கால் அம்மையார் என்று அனைவராலும் அழைக்கலாயினார்!  அல்லும் பகலும் சிவநாமச்சிந்தையுடன் வாழ்ந்து வந்த அம்மையார், திருக்கயி‌லை சென்று பரமனைத் தரிசிக்க எண்ணினார். அம்மையார் சிவநாமத்தைச் சிந்தையிலே கொண்டு பாதயாத்திரையைத் தொடர்ந்தார். கயிலை மலையை அடைந்தார். திருக்கயிலை மலையை, பாதத்தினால் மிதித்து நடந்து செல்வதற்கு அஞ்சிய அம்மையார், தலையால் நடந்து மகிழ்ச்சி‌ மேலிட கயிலை மலைமீதேறிச் சென்றார். புனிதவதி அம்மையார் மலைக்கு வந்து கொண்டிருப்பதைக் கண்டு, பிரட்டியார் பரமனிடம், ஐயனே!  தலையினால் வருகின்ற என்புருவம் படைத்த உடம்பின் அன்பை என்னவென்பது என்று சொன்னாள். உமையாளின் மொழி கேட்டு இறைவன், தேவி! இவ்வென்புடம்ப நம்மை வழிபடும் அம்மை. இந்த என் புருவத்தை நம்மிடமிருந்து வேண்டுமென்றுதான் பெற்றார் என்று திருவாய் மலர்ந்தார். காரைக்கால் அம்மையார் அருகில் வருவதை விழி மலர்ந்த வள்ளலார் அன்பு மேலிட, அம்மையே என்றார். அம்மையாரும அப்பா என்றார். இறைவன் திருவடித் தா‌மரைகளில் வீழ்ந்து வணங்கினார். அம்மையே ! உனக்கு ‌யாது வரம் வேண்டும் என்று ஐயன் திருவாய் மலர்ந்தார், அம்மையார் பக்திப் பெருக்கோடு, ஐயனே ! அன்பருக்கு மெய்யனே ! எனக்கு என்றும் இறவாத இன்ப அன்பு வேண்டும். மானிடப் பிறவி எடுத்து உலகப்பற்று, பாசத்தில் சிக்கி உழலாமல் இருக்க அருள்புரிய வேண்டும். ஒருக்கால் உலகில் பிறவி எடுத்துவிட நேர்ந்தால் ஐயனை மறவாதிருக்க அருள் புரிய வேண்டும். அத்தோடு இறைவா! ஐயன் ஆனந்தத் தாண்டவம் ஆடும்போது நான் திருவடிக்கீழ் இருந்து ஆனந்தமாகப் பாடிக்களித்து மகிழந்து பேரின்பம் கெõள்ளத் திருவருள் புரிய வேண்டும் என்று வணங்கி நின்றார். தென்னாட்டில் உள்ள திருவாலங்காட்டில் நாம் நடனம் ஆடும்போது நீ எமது திருவடிகீழ் அமர்ந்து கண்டுகளித்துப் பாடி மகிழ்வாயாக ! என்று இறைவன் அருள் செய்தார். அம்மையார் மீண்டும் தலையாலேயே நடந்து திருவாலங்காட்டை அடைந்தார். திருவாலங்காட்டை அடைந்த அம்‌மையார், ஆனந்தக் கூத்தின் திருக்கோல நடனம் கண்டு, கொங்கை திரங்கி என அடி எடுத்து மூத்த திருப்பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். தாண்டவ மூர்த்தியின் நர்த்தனத்தின் சக்தியிலே அம்மையார் அருள் பெற்று எட்டியிலவம் எனத் தொடங்கும் திருப்பதிகத்தையும் பாடினார். இவ்வாறு திருப்பதிகங்கள் பல பாடி மகிழ்ந்த காரைக்கால் அம்மையார் திருசடையான் சேவடி நிழலிலே என்றென்றும் பாடிப் பரவசமடையும் பிறவாய் பெரு வாழ்வைப் பெற்றார்கள்.

எழுதியுள்ள நூல்கள்

காரைக்காலம்மையார் கி.பி. 300-500 ஆகிய காலப்பகுதியில் வாழ்ந்தவர் என அறிஞர்கள் கருதுகிறார்கள். மேலும் இறைவனை இசைத் தமிழால் பாடியவர்களில் இவரே முதலாமவர். ஒரு பாடலின் இறுதி வார்த்தையை அடுத்த பாடலின் முதல் வார்த்தையாகப் பயன்படுத்தி எழுதும் அந்தாதி முறையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியவரும் இவரே. தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயருடனேயே இணைந்து "காரைக்கால் அம்மையார்" என்று அறியப்படும் இவர் இயற்றிய பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி 101 பாடல்கள், திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இரண்டு (22 பாடல்கள்), திரு இரட்டை மணிமாலை 20 பாடல்கள் ஆகும். தேவார காலத்துக்கு முந்தி இயற்றப்பட்ட இவரது பதிக முறையைப் பின்பற்றியே பிற்காலத்தில் தேவாரம்,தேவாரப் பதிகங்கள் அமைந்தன.
 தனது பாடல்களில் இறைவனுக்கு பல பெயரிட்டு வழங்குகிறார். அடிகள், அழகன், அந்தணன், அரன், ஆதிரையான், ஆள்வான், இறைவன், ஈசன், உத்தமன், எந்தை, எம்மான், என் நெஞ்சத்தான், கண்ணுதலான், கறைமிடற்றான், குழகன், சங்கரன், நம்பன், பரமன், புண்ணியன், மாயன், வானோர் பெருமான், விமலன், வேதியன். ஆனால் சைவ சமயம் என்ற சொல்லுக்கு ஆதாரமான சிவன் என்ற சொல்லே அம்மையாரது பாடல்களில் எங்கும் காணப்படுகிறது.
  காரைக்கால் அம்மையார் திருக்கோயில்     
                                          
                                                   ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

                                                            மாங்கனி திருவிழா


காரைக்காலில் வரும்12ம் தேதி மாங்கனி திருவிழா துவங்குகிறது. 
காரைக்கா லில் 63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் அம்மையாரின் கணவனிடம்  சிவபெருமான் மாங்கனி கொடுத்து அனுப்பி, அதை அடியார் வேடத்தில் சிவபெருமான் வந்து சாப்பிடுவதும், இதனால் காரைக்கால் அம்மையாரை  பிரிந்து அவரது கணவர் வெளியூர் செல்வதும், அம்மையார் இறைவனை காண கயிலாயத்திற்கு தலைகீழாக கைகலால் நடந்து செல்வதையும் சி த்தரிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனி திருவிழா நடக்கிறது. இன்று ஜூலை 10 மாப்பிள்ளை அழைப்பும், நாளை 11ம் தேதி காரைக்கால்  அம்மையார், பரமதத்தர் செட்டியார் திருக்கல்யாணமும், இரவு பிஷாடணமூர்த்தி வெள்ளை சாத்தி புறப்பாடும், நாளை மறுநாள் 12ம் தேதி சிவபெருமான்  அடியார் கோலத்தில் வீதி உலா வருவதும், அப்போது பக்தர்கள் மாங்கனி விசும் வைபவம் நடக்கிறது. அன்று மாலை அம்மையார் சிவபெரு மானுக்கு மாங்கனியுடன் அமுதுபடையல் நிகழ்ச்சி நடக்கிறது.
                                ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Monday 7 July 2014

                                            ஷண்முக தவசி சுவமிகள்  குரு பூஜை (07.07.2014)



ஷண்முக தவசி சுவாமிகளின் குரு பூஜை  ஆனி மாதம் சதயம் நட்சத்திரம்  அன்று நடைபெறும்.   சுவாமிகளின் வாழ்கையில் நடந்த நிகழ்வுகள்   அடுத்து வரும் பதிவுகளில்..






                                                       

                                              குருவடி சரணம் !!!      திருவடி சரணம் !!!


                                                
                                                

Friday 4 July 2014

                                                                      வியாக்ரபாதர்



Temple images
மத்யந்தனர் என்ற முனிவருக்கு ஒரு மகன் பிறந்தான். அவனுக்கு மழன் எனப் பெயர் சூட்டி, வேதங்களைக் கற்றுக் கொடுத்தார்.ஒருமுறை மழன், தந்தையே! இறைவனை அடைய வழி தவம் செய்வது தானே!, என்று கேட்டான்.மகனே! தவம் செய்வதால் மனிதனுக்கு சொர்க்கம் மட்டுமே கிடைக்கும். ஆனால், பிறவியில்லாத நிலை ஏற்படாது. சிவபூஜையைப் பக்தியுடன் செய்பவர்களே மறுபிறவி எடுப்பதில்லை. நீ தில்லைமரங்கள் அடர்ந்த வனத்தில் இருக்கும் சிவனை வழிபட்டால் உனக்கு நற்கதி கிடைக்கும், என்றார்.மழன் அன்றுமுதல் சிவனையே நினைத்து எதையும் செய்தான். அவனை, மழமுனிவர் என மற்ற முனிவர்கள் அழைத்தனர்.மழமுனிவர் சிவபூஜை செய்வதற்கு தில்லைவனம் வந்து சேர்ந்தார். தினமும் பூப்பறித்து அர்ச்சனை செய்வார். சில சமயங்களில் அழுகல் பூக்களும் சேர்ந்து வந்து விடும்.
அதனை எண்ணி வேதனைப்படுவார்.  சிவனே! அழுகிய மலர்களால் உம்மை அர்ச்சித்தால் பாவம் வந்து விடுமே! விடிந்த பிறகு மலர் பறித்தாலோ, வண்டுகள் தேன் குடிக்க வந்து எச்சில்பட்டு விடுகிறது. விடியும் முன் பறிக்க எண்ணி மரம் ஏறினாலோ கால் வழுக்குகிறது. இருட்டில் மலர் பறித்தால் கண் தெரியாமல் அரும்பையும், அழுகலையும் பறித்து விடுகிறேன். நல்ல பூக்களை மட்டும் பறிக்க நீ தான் வழிகாட்ட வேண்டும், என்று வேண்டிக் கொண்டார். பக்தனின் கோரிக்கையை ஏற்ற சிவன் அவர் முன் தோன்றினார். அதைக் கண்ட மழமுனிவர் பரவசம் அடைந்து,எனக்கு வாழ்வில் எந்த சுகமும் வேண்டாம். உன்னைக் காலம் முழுவதும் பூக்களால் அர்ச்சிக்கும் பாக்கியம் மட்டும் போதும். வழுக்காமல் மரம் ஏற புலியின் கால்களைத் தரவேண்டும். கைவிரல்கள் புலி நகமாய் மாற வேண்டும். இதைத் தந்தால் எளிதாக மரம் ஏறமுடியும். அது மட்டுமல்ல! கால்களிலும், விரல்களிலும் கண்கள் இருந்தால் நல்ல மலர்களை மட்டும் பறிப்பேன்.
அவற்றையும் தர வேண்டும் என்று வேண்டினார்.சிவனும் அந்த வரத்தை வழங்கினார். புலியை சமஸ்கிருதத்தில் வியாக்ரம் என்பர். இதனால், மழமுனிவர் வியாக்ரபாதர் என்னும் பெயர் பெற்றார். சிவதரிசனம் மூலம் அரிய வரம் பெற்ற அவரை அனைவரும் பாராட்டினர்.ஒருசமயம், வைகுண்டத்தில் விஷ்ணுவின் பாரத்தை திடீரென தாங்க முடியாமல் ஆதிசேஷன் அவதிப்பட்டார். இதற்கான காரணத்தைக் கேட்ட போது, ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள தில்லை வனத்தில் சிவனின் நடனக்காட்சியைப் பார்த்தேன். அந்த மகிழ்ச்சியில் என் உடல் பூரித்தது. அதனால் பாரம் அதிகமானது, என்றார்.அந்தக்காட்சியைக் காண ஆதிசேஷன் விருப்பம் கொண்டார். விஷ்ணுவும் அனுமதித்தார். பூலோகத்தில் பிறக்க வேண்டுமானால் ஒரு தாய் தந்தை வேண்டுமல்லவா! தங்களுக்கு ஆதிசேஷன் பிள்ளையாகப் பிறக்க வேண்டும் என்று அத்திரி மகரிஷியும், அவர் மனைவி அனுசூயாவும் விஷ்ணுவிடம் வரம் பெற்றிருந்தனர். அந்த தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு பதஞ்சலி என்னும் பெயரிடப்பட்டது. வியாக்ரபாதர் தவம் செய்யும் வனத்திற்குச் சென்று அவரைச் சந்தித்த பதஞ்சலி, சிவனின் நடனத்தைக் காணும் ஆவலைத் தெரிவித்தார். இருவரும், சிவபெருமான் நடனதரிசனம் தரும் நன்னாளுக்காகக் காத்திருந்தனர். மார்கழி திருவாதிரையன்று பேரொளி ஒன்று அவர்கள் கண் முன் விரிந்தது. நந்திகேஸ்வரருடன் கருணையே வடிவான சிவன் எழுந்தருளினார். உமையவள் சிவகாமி இறைவனின் அருகில் நின்றாள். அப்போது சிவன் ஆனந்த நடனம் ஆடினர். வியாக்ரபாதரும், பதஞ்சலியும் ஈசனின் திருநடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜா என்று போற்றி மகிழ்ந்தனர்.


                                                            ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்


                                                      ஆனி திருமஞ்சனம்(04.07.2014)
                                                              
                                                   




சிவாலயங்களில் நடராஜருக்கு நடத்தப்பெறும் அபிஷேக விழாக்களில் சிறப்பான விழாக்கள் இரண்டு. ஒன்று மார்கழித்திருவாதிரை. மற்றொன்று ஆனி உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் திருமஞ்சனம். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய நாட்களில் மாலைநேரத்தில் அபிஷேகம் நடத்தப்படும். பொன்னம்பலமான சிதம்பரத்தில், பத்துநாட்கள் நடைபெறுவது ஆனி உத்திரத்திருவிழா. ஆனிஉத்திர நட்சத்திரத்தன்று இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலையில் அபிஷேகம் நடக்கும். அன்று பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாமியம்மனும் ஆனந்த நடனம் செய்தபடியே எழுந்தருள்வர். இன்றைய தினத்தில் தான் நடராஜர் சன்னதிகளில் ஆனித்திருமஞ்சனம் நடக்கிறது. பக்தர்கள் நடராஜரைத் தரிசித்து தங்கள் வேண்டுதலை வைக்க ஆனித்திருமஞ்சனம் மிக நல்லநாள். கலையார்வம் மிக்க மாணவர்கள் இன்றைய தினம் அவசியம் நடராஜரைத் தரிசிக்க வேண்டும்.
கோயில் என்பது எல்லா கோயிலுக்கும் பொதுப்பெயர் என்றாலும், சிவத்தலங்களில் சிதம்பரம் மட்டுமே கோயில் என்று குறிப்பிட்டு வழங்கப்படுகிறது. தில்லைவனம், பெரும்பற்றப்புலியூர், சிதாகாசம், ஞானாகாசம், பொன்னம்பலம், பூலோககைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் போன்ற பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. சிதம்பரம், பழநி, பாபநாசம், குற்றாலம், ஸ்ரீரங்கம்(ன்) போன்ற திருத்தலங்களின் பெயரை குழந்தைகளுக்கு இடும் வழக்கம் உண்டு. அதுபோல சிதம்பரம், பொன்னம்பலம் என்று பெயரிடும் வழக்கமும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.  இங்கு முதல் நாள் முதல் எட்டாம் திருவிழா வரை உற்ஸவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சோமாஸ் கந்தர், சிவானந்த நாயகி, சண்டேசுவரர் முதலிய பஞ்சமூர்த்திகளும் வாகனங்களில் எழுந்தருள்வர். ஒன்பதாம் நாளில் பஞ்ச மூர்த்திகள் அனைவரும் ஐந்து தேர்களில் பவனி வருவார்கள். நடராஜப்பெருமான் திருத்தேரில் எழுந்தருளி நான்கு வீதிகளில் உலாவந்த பின்னர் இரவில் ராஜசபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தில் தங்குவார். ஆனிஉத்திரமான பத்தாம் நாளன்று வைகறையில் ஆனித் திருமஞ்சன அபிஷேகம் விமரிசையாக நடைபெறும். பகல் ஒருமணிக்கு நடராஜரும், சிவகாம சுந்தரியும் ஆனந்த நடனம் செய்தபடியே, ஞானாகாச சித்சபையில் எழுந்தருள்வர். பெருமாளும், சிவகாமி அம்மனும் மாறி மாறி நடனம் செய்து சிற்றம்பல மேடைக்கு எழுந்தருளும் காட்சி அனுக்கிரக தரிசனமாகும். அன்றிரவு மீண்டும் சித்சபையாகிய சிற்றம்பலத்தில் கடாபிஷேகம் நடைபெறும்.
நடராஜப் பெருமானுக்கு ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்வதுதான் ஆனித்திருமஞ்சனம். சிவாலயங்களில் அமைந்துள்ள நடராஜர் சபையில் ஆனித் திருமஞ்சனம் விசேஷமாகக் கொண்டாடப்படும். அன்று சிதம்பரம் ஆலயத்தில் ஆதிமூலவர் சந்திர மௌலீஸ்வரருக்கு ஆறுகால பூஜைகள் வெகு விமர்சையாக நடக்கும். அப்போது கனக சபையில் சிறப்பு அபிஷேகம் நடைபெறும். இது முடிந்த பின் சிவகாமியம்மை சமேத நடராஜருக்கு 16 வகை தீபங்களால் ஆராதனை காட்டப்படும். ஆனித் திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் ஆரம்பித்து வைத்தவர் பதஞ்சலி மகரிஷி. இவர் ஆதிசேஷனின் அம்சம். இவ்விழா சிதம்பரத்தில் பத்துநாட்கள் சிறப்பாக நடக்கும். அதில் 9ம் நாள் தேரோட்டம் மிக முக்கியமானது. தேர்த் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகளும் 5 தேர்களில் எழுந்தருளி உலா வருவது கண்கொள்ளாக்காட்சி. மூலவர் நடராஜரே தேரில் எழுந்தருளி 4 மாட வீதிகளிலும் உலா வரும் அதிசயம் இங்கு மட்டுமே நடக்கிறது.
தேர் வீதியுலா ஆயிரம் கால் மண்டபம் வந்தடைய நடு இரவாகிவிடும். இந்த மண்டபத்திற்கு ராஜசபை என்றும், அரசம்பலம் என்றும் பெயர். இரவு நடராஜரும் சிவகாமியம்மையும் இம்மண்டபத்தில் தங்குவார்கள். மறுநாள் திருமஞ்சனம் நடைபெறும். அபிஷேகம், அலங்காரம் முடிந்தபின் இருவரும் ஆனந்தத் தாண்டவம் ஆடியபடி ஞானசபையான சிற்சபையில் எழுந்தருளுவார்கள். அங்கு கடாபிஷேகம் நடைபெறும். அடுத்த நாள் விடையாற்றி உற்சவம் முடிந்தபின் கொடியிறக்கம் கண்டு விழா இனிதே நிறைவுறும்



ஆடல் காணீரோ...திருவிளையாடல் காணீரோ: ஆடலரசனான நடராஜப் பெருமான் ஆடிய அற்புதத் தாண்டவங்களில் 108 தாண்டவங்கள் மிகவும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு தாண்டவத்திற்கும் புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சில திருத்தலங்களில் ஆடிய தாண்டவங்கள் மிகவும் சிறப்பிக்கப்படுகின்றன. திருநெல்வேலியில் தாமிர சபையில் இறைவன் ஆடும் தாண்டவம் படைத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இதனை காளிகா தாண்டவம் என்பர்; முனி தாண்டவம் என்றும் சொல்வர். மதுரை திருப்பத்தூரில் ஆடும் தாண்டவம் கவுரி தாண்டவம் மற்றும் சந்தியா தாண்டவமாகும். இது காத்தல் தொழிலைக் காட்டக்கூடியது. இருண்ட நள்ளிரவில் சிவபெருமான் ஆடும் சங்கார தாண்டவம் அழித்தல் தொழிலைக் காட்டக்கூடியது. மறைத்தல் தொழிலை திருக்குற்றாலத்தில் சித்திரசபையில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம் என்பர். சிதம்பரத்தில் இறைவன் ஆடும் தாண்டவம் ஆனந்த தாண்டவம். இவை ஐந்து தொழில்களைக் காட்டக் கூடியவை என்று புராணங்கள் கூறுகின்றன. சிவபெருமான் தாண்டவமாடும் முதன்மைச் சபைகள் ஐந்து. பதஞ்சலி, வியாக்ரபாதருக்காக ஆனந்த தாண்டவம் ஆடினார். இது சிதம்பரம் திருத்தலத்தில் நடந்தது - இது பொன்னம்பலம் ஆகும்.
மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்திற்கு வந்த பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் வேண்டிக் கொண்டதால், சிவபெருமான் திருமண விருந்திற்கு முன் ஆடிக்காட்டிய நடனம் மதுரை வெள்ளியம் பலத்தில் நடைபெற்றது. இங்கு, ராஜசேகரபாண்டியன் என்னும் மன்னனின் வேண்டுதலுக்கிணங்க சிவபெருமான் கால் மாறி - வலது காலைத் தூக்கி ஆடினார். இதேபோல் திருவாரூரிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் உள்ள கீழ்வேளூர் திருத்தலத்தில் அகத்திய மாமுனிவருக்கு இறைவன் திருமணக் காட்சியைக் கொடுத்தபோது, அகத்தியரின் வேண்டுதலுக்கு இணங்கி இறைவன் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கி ஆடினார். இறைவனின் வலது பாத தரிசனத்தை அகத்தியர் கண்டார். சிவபெருமான் வலக்காலை உடலோடு ஒட்டி உச்சந்தலை வரை தூக்கி ஆடிய தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம். இந்த நிகழ்ச்சி திருவாலங்காட்டில் நடந்தது. இத்தலத்தில் ரத்தின சபை அமைந்துள்ளது. வேணுவனமாகிய நெல்லையில் தாமிரபரணி ஆற்றங்கரையில் இறைவன் தாமிரசபையில் நடனமாடுகிறார். திரிகூடமலைக்கு வந்து திருமாலும், பிரம்மாவும், தேவர்களும் தவம் செய்ய, அவர்களுக்காக இறைவன் திருக்கூத்து தரிசனம் தந்தார். திரிகூடமலையான திருக்குற்றாலத்தில் உள்ளது சித்திரசபை. இங்கு இறைவன் ஆனந்த நடனம் புரியும் ஓவியம் உள்ளது. திருவெண்காடு சுவேதாரண்யர் திருக்கோயிலில் உள்ள நடன சபையை ஆதிசபை என்று போற்றுவர். இங்கு சுவேதகேது என்ற மன்னன் இறைவனை வேண்டியதால் நவதாண்டவங்களை ஆடி மகிழ்வித்தார். இதற்குப் பிறகுதான் இறைவன் சிதம்பரத்தில் ஆடினார் என்று புராணம் கூறுகிறது. திருவாரூரில் திருமாலின் மார்பிலே இருந்த ஈசன் அவர் மூச்சுக்காற்றுக்கு ஏற்ப ஆடிய நடனம் அஜபா நடனம் எனப்படுகிறது. திருவாரூருக்கு அருகிலுள்ள திருக்காறாயிலில், நடராஜரின் அம்சமாகிய ஆதிவிடங்கர் குக்குட நடனம் ஆடுகிறார். சண்டைக்குச் செல்லும் கோழியைப் போன்று இடமும் வலமும் சாய்த்துப் பார்த்து முன்னேறி, நிதானித்து, சுழன்று ஆடினார். தேனடையில் வண்டு ஒலித்துக் கொண்டே முன்னும் பின்னும் மேலும் கீழுமாக ஆடுவதைப் போன்று ஆடும் இறைவனின் பிரமர தாண்டவத்தை திருக்குவளையில் தரிசிக்கலாம். திருநள்ளாற்றுத் தலத்தில் பித்தேறியவனைப் போல் மனம் போனபடியெல்லாம் இறைவன் ஆடிய நடனத்தை உன்மத்த நடனம் என்பர். நாகை வேதாரண்யத்தில் புவனிவிடங்கர் ஆடும் நடனம், அம்சபாத நடனம் எனப்படுகிறது. அன்னப்பறவை அடிமேல் அடியெடுத்து வைத்து அழகாக நடப்பது போன்ற தோற்றமாகும். 
திருவாரூர், திருக்குவளைக்கு வடக்கே சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருவாய்மூரில் நீலவிடங்கர் ஆடும் நடனம் கமல நடனமாகும். இறைவன் காலனை அழித்த பின் ஆடிய காலசம்ஹார தாண்டவத்தை மயிலாடு துறைக்கு அருகிலுள்ள திருக்கடையூர் தலத்தில் தரிசிக்கலாம். ஈரோடு அருகிலுள்ள கொடுமுடியில், சித்ரா பவுர்ணமியன்று பரத்வாஜ முனிவருக்காக இறைவன் ஆடிய நடனத்தை சித்திர நடனம் என்று போற்றுவர். ஆடலரசனான நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு நாட்கள் மட்டுமே அபிஷேகம் நடைபெறுகின்றது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திரத்தில் உச்சிக் காலத்திலும், ஆனித் திருமஞ்சனம் உத்திர நட்சத்திரத்தில் பிரதோஷ காலத்திலும், ஆவணி மாதம் சதுர்த்தசி திதியன்று சாயரட்சை காலத்திலும், புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசி திதியில் அர்த்த ஜாமத்திலும், மார்கழியில் திருவாதிரை நட்சத்திரத்தன்று நள்ளிரவிலும், மாசி மாதம் சதுர்த்தசி திதியில் கால சந்தியிலும் அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெறும். இதில் ஆனி மாதம் நடைபெறும் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று போற்றுவர். தாண்டவங்கள் பல ஆடிய இறைவனான நடராஜப் பெருமான் சில திருத்தலங்களில் வித்தியாசமான திருக்கோலத்திலும் அருள்புரிகிறார். திருச்சியை அடுத்துள்ள திருவாச்சி என்னும் திருத்தலத்தில் விரிந்த செஞ்சடையின்றி, முயலகனுமின்றி ஒரு சர்ப்பத்தின் மேல் ஆடும் கோலத்தில் உள்ளார். திருச்சிக்கு அருகிலுள்ள வயலூர் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள நடராஜர் திருமேனி விக்கிரகத்தில் திருவாச்சி இல்லை. திரிசடை ஜடாமுடி இல்லை. கிரீடம் மட்டும் அணிந்துள்ளார். இடது மேல் கையில் அக்னியும், வலது மேல் கையில் உடுக்கையும், வலது கீழ்க்கரம் அபயம் தரும் நிலையிலும், இடது கீழ்க்கரம் வலது பாதத்தைக் காண்பிக்கும் நிலையில் தொங்கவிட்டும் எழுந்தருளியுள்ளார். மேலும் இவரது காலடியில் முயலகன் மிதிபடவில்லை. முயலகன் இல்லாத அற்புதத்திருமேனி என்று போற்றுவர். கால்தூக்கி ஆடாமல் நடனக் கோலத்தில் சற்று நளினமாகக் காட்சி தரும் இத்திருமேனியை சுந்தரத் தாண்டவத் திருமேனி என்றும் உமாநடன வடிவம் என்றும் போற்றுவர்.
சிவாலயங்களில் பஞ்சலோகத் திருமேனியில் காட்சிதரும் நடராஜப் பெருமான், ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கைத் திருத்தலத்தில் மரகதக் கல் (பச்சைக் கல்) திருவுருவில் எழுந்தருளியுள்ளார். இத்திருமேனிக்கு சந்தனக்கலவை பூசியிருப்பார்கள். நடராஜருக்கு மட்டுமின்றி ஸ்ரீரங்கம் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதருக்கும் ஆனித்திருமஞ்சன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தன்று பெரிய பெருமாளான பள்ளிகொண்ட ரங்கநாதருக்குத் திருமஞ்சனம் மிகச்சிறப்பாக நடைபெறும். இதனை ஜேஷ்டாபிஷேகம் என்று போற்றுவர். இத்திருமஞ்சனத்தின் போது பெருமாளின் திருக் கவசங்களையெல்லாம் களைந்துவிட்டு ஏகாந்தத் திருமஞ்சனம் நடைபெறும். இதை சேவிப்பது மிகவும் விசேஷம். இதனை பெரிய திருமஞ்சனம் என்பர். ஸ்ரீரங்கம் கோயிலின் தென்புறத்தில் ஓடும் காவிரி நதியில் வேத மந்திரங்கள் முழங்க நீர் சேகரிப்பார்கள். தங்கக் குடத்தில் நிறைத்த நீரை யானையின் மீதும்; வெள்ளிக்குடங்களில் நிறைத்த நீரை கோயில் பரிசாரகர்கள் தலையில் சுமந்தும் திருமஞ்சனத்திற்கு எடுத்து வருவார்கள். திருமஞ்சனம் நடைபெற்றதும் பெரிய பெருமாளுக்கு தைலக்காப்பு இடுவார்கள். திருமுக மண்டலத்தைத் தவிர மற்ற திருமேனியை இந்த நாளில் தரிசிக்க முடியாமல் திரையிட்டிருப்பார்கள். திருமஞ்சனத்திற்கு அடுத்த நாள் கோயிலில் பெருமாளுக்காகத் தயாரிக்கப்படும் சிறப்புமிக்க பிரசாதத்தை பெருமாளுக்கு நைவேத்தியம் செய்தபின் பக்தர்களுக்கு அளிப்பார்கள். ஆனித் திருமஞ்சன அபிஷேகத்தின்போது நடராஜப் பெருமானையும், ரங்கநாதப் பெருமாளையும் தரிசிப்போர் வாழ்வில் வசந்தம் வீசும் என்பதில் ஐயமில்லை!
ஆனித் திருமஞ்சனம் காணும் நடராஜர்: ஆனந்த நடனம்: சிவனின் ஆனந்த நடனத்தைக் காண வியாக்ரபாதர், பதஞ்சலி முனிவர்கள் சிதம்பரத்தில் தவம் செய்து வந்தனர். அவர்களுக்கு நடன தரிசனம் அருள சிவன் இசைந்தார். இதனை அறிந்த இந்திராதிதேவர்கள், பிரம்மா, விஷ்ணு, லட்சுமி, சரஸ்வதி, திரிசகஸ்ர முனிவர்கள், உபமன்யுமுனிவர் என்று அனைவரும் கூடினர். அங்கே பேரொளி ஒன்று தோன்றியதும், தேவதுந்துபி வேகமாக முழங்கியது. நந்தீகேஸ்வரர் தன் பொற்பிரம்புடன் வந்தருளினார். கருணையே வடிவான சிவன் நடராஜராகவும், தாய் பார்வதி சிவகாமசுந்தரியாகவும் காட்சியளித்ததும் சிவசிவ என்று கோஷமெழுப்பி அனைவரும் கரம்குவித்து நின்றனர். நடராஜர் புலித்தோல் உடுத்தி, உடுக்கை, அனல், மான், மழு, நாகாபரணம் அணிந்து நின்றார். வலக்கையால் டமருகத்தை அடித்தும், இடக்கையில் அக்னி ஏந்தியும், ஒருகையால் அபயம் அளித்தும், மறுகையால் பாதத்தைக் காட்டியும் நடனமாடினார். அவரின் சிவந்த சடைகள் எட்டுத்திக்கும் அசைந்தாடின. அந்த நடன தரிசனத்தை இன்றும் நமக்கு சிதம்பரத்தில் வழங்கிக் கொண்டிருக்கிறார்.
அங்கப்பிரதட்சணம் செய்த அப்பர்: சிவனடியார்களில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் சிதம்பரம் கோயிலின் நான்கு கோபுரவாசல் வழியாக நுழைந்துள்ளனர். கிழக்கு வாசல் வழியாக மாணிக்கவாசகரும், மேற்கில் திருநாவுக்கரசரும், வடக்கில் சுந்தரரும், தெற்கில் திருஞானசம்பந்தரும் வந்ததாகச் சொல்வர். இவர்களில் அப்பர் எனப்பட்ட நாவுக்கரசர், தேரோடும் வீதிகளில் அங்கப்பிரதட்சணம் செய்து நடராஜரை வழிபட்டார். திருநாளைப்போவார் என்னும் நந்தனார், மறைஞானசம்பந்தர், உமாபதிசிவம், நீலகண்டர், சேந்தனார் போன்ற அடியார்களின் வாழ்க்கையோடும் இக்கோயில் தொடர்புடையது.
பஞ்ச சபைகள்:
ரத்தின சபை  திருவாலங்காடு
கனகசபை  சிதம்பரம்
ரஜிதசபை  (வெள்ளி சபை)  மதுரை
தாமிரசபை  திருநெல்வேலி
சித்திரசபை  திருக்குற்றாலம்
பஞ்ச தாண்டவ தலங்கள்
ஆனந்த தாண்டவம்  சிதம்பரம், பேரூர்
அஜபா தாண்டவம்  திருவாரூர்
சுந்தரத் தாண்டவம்  மதுரை
ஊர்த்துவ தாண்டவம்  அவிநாசி
பிரம்ம தாண்டவம்  திருமுருகன்பூண்டி
காட்டிடை ஆடும் கடவுள்
திருவாலங்காடு  ஆலங்காடு
திருவெண்பாக்கம்  இலந்தைக்காடு
திருவெவ்வூர்  ஈக்காடு
திருப்பாரூர்  மூங்கிற்காடு
திருவிற்கோலம்  தர்ப்பைக்காடு
ஆனந்தத் தாண்டவம்
படைத்தல்  காளிகாதாண்டவம்  திருநெல்வேலி, தாமிரசபை.
காத்தல்  கவுரிதாண்டவம்  திருப்புத்தூர், சிற்சபை.
அழித்தல்  சங்கார தாண்டவம்  நள்ளிரவில்.
மறைத்தல்  திரிபுர தாண்டவம், குற்றாலம், சித்திரசபை
அருளல்  ஊர்த்துவ தாண்டவம்  திருவாலங்காடு, ரத்தினசபை.
ஐந்தொழில்களையும் ஒருங்கே நடத்தும் ஆனந்தத்தாண்டவம் சிதம்பரத்தில்.
நடராஜர் அபிஷேகங்கள்
தேவர்கள் நாளில் வைகறைக்குச் சமமானது மார்கழி, காலைச் சந்திக்குச் சமமானது மாசி. உச்சிக்காலத்திற்குச் சித்திரை, மாலைக்காலத்திற்குச் சமமானது ஆனி. இரவுக்கு ஆவணி, அர்த்தயாமத்துக்குப் புரட்டாசி, ஆனிமாதம் உத்திர நட்சத்திரத்திலன்று நடக்கும் தரிசனமாகையால் இத்தினம் ஆனி உத்திரம் எனவும் ஆனித்திருமஞ்சனம் எனவும் படும்.
தில்லையில் ஐந்து சபைகள்
1. சித்சபை  சிற்றம்பலம் நடராஜப் பெருமானும் சிவகாமி அம்மையும் வீற்றிருக்கும் கருவறை. இதன் வலப்புறம் சிதம்பர ரகசியம். பொன் வேய்ந்த பொன்னம்பலத்தில் நடராஜர் உருவம், சிதம்பர ரகசியம் அருவம், ஸ்படிகலிங்கம் அருவுருவம் என மூன்று நிலைகள்.
2. கனகசபை  சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் பெருமான் திருமஞ்சனம் கொள்ளும் இடம்.
3. தேவசபை  பேரம்பலம் உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர்.
4. நிருத்த சபை  தேர் அம்பலம், நடராஜாவின் திருமுன்னர் கொடிமரத்தின் தென்புறம் உள்ளது. ஊர்த்துவ தாண்டவ மூர்த்திகள் காட்சி தரும் இடம்.
5. ராஜசபை  ஆயிரங்கால் மண்டபம், மார்கழி, ஆனித் திருமஞ்சனம் நடக்குமிடம். ஆருத்ரா தரிசனம் கொடுக்குமிடம்.
நவதாண்டவம்
தஞ்சை மாவட்டம் திருச்செங்காட்டங்குடி திருத்தலத்தில் நவதாண்டவ மூர்த்திகளான புஜங்க லலிதம், கால சம்ஹாரமூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுர சம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகியயோரை சிற்ப வடிவில் காணலாம்.
மடவார் விளாகம் நடராஜர்
ஸ்ரீ வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார் விளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் பாண்டிநாட்டு கோயில்களில் காணப்பெறுவது போல ஒரே கல்லால் செய்யப்பெற்ற நடராஜரின் அற்புதக் கலைப் படைப்பு உள்ளது.
மேலைச் சிதம்பரம்
பேரூர் பட்டீஸ்வரர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் பொருட்டு தில்லைத் திருநடனத்தை காட்டியருளிமையால் இறைவனை குடகத்தில்லை அம்பலவாணன் என்று தேவாரத்தில் சுந்தரர் குறித்துள்ளார். பேரூர் மேலைச் சிதம்பரம் என வழங்குவதற்கு இந்நிகழ்ச்சியே காரணமாகும்.
மஞ்சனம் என்றால் நீராடல் என்பது பொருள். இறைவனின் நீராடலைத் திருமஞ்சனம் என்று குறிப்பிடுவர். ஆனிமாத உத்திர நட்சத்திர நாளில் இவ்விழா நடத்தப்படுகிறது. இதையொட்டி முக்கிய சிவாலயங்களில் பத்துநாள் விழா நடக்கும்.  ஒன்பதாம் நாள் விநாயகர், சுப்பிரமணியர், நடராஜர், சிவகாமி,சண்டிகேஸ்வரர் தேர்களில் வலம் வருவர். பத்தாம் நாள் நடராஜருக்கு திருமஞ்சனம் என்னும் சிறப்பு நீராடல் விழா நடக்கும். அபிஷேகத்துக்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும். உச்சிவேளையில் (மதியம்) நடராஜர் ஆனந்த நடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார். அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பாள். பின் மகாதீபாராதனை நடக்கும். அன்று இரவு கொடி இறக்கப்படும்.
உதயத்திற்கு முன்பே: தினமும் நடைபெறும் பூஜைக்கு நித்தியம் என்றும், விசேஷ கால பூஜைக்கு நைமித்திகம் என்றும் பெயர். நித்திய பூஜையில் உண்டாகும் குறைகள் நைமித்திக பூஜையில் நீங்குவதாக ஐதீகம். நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் நடக்கும். இதில் இரண்டு அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது. அவை மார்கழி திருவாதிரை, ஆனி உத்திர திருமஞ்சனம். இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்து முடிப்பர்.
இதயக்கோயிலில் ஆனந்த நடனம்: வியாக்ரபாதர், பதஞ்சலி இருவரும் சிதம்பரத்தில் ஈசனின் நடனம் கண்டு மகிழ்ந்தனர். நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது. வலக்கை டமருகம் இசைக்கிறது. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது. அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது. பால் போல வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது. செஞ்சடை எட்டுத் திசைகளிலும் விரிந்தாடுகிறது. வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது. இடக்கால் குஞ்சித பாதமாக (தொங்கிய நிலையில்) நமக்கு அருள்செய்கிறது. இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார். இதை கண்டு தரிசித்தால் வாழ்வில் எப்போதும் நமக்கு ஆனந்தமே.
மூன்று வழிபாடு: சிவபெருமான் அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் வழிபடப்படுகிறார். அருவம் என்பது உருவமற்றநிலை, உருவம் என்பது கண்ணுக்குத் தெரியும் வடிவநிலை, அருவுருவம் என்பது உருவமும் அருவமும் கலந்த நிலை. இம் மூன்று நிலைகளும் உள்ள தலமாக சிதம்பரம் உள்ளது. அருவநிலைக்கு சிதம்பர ரகசியமும், உருவநிலைக்கு நடராஜரும், அருவுருவ நிலைக்கு மூலவர் மூலட்டானேஸ்வர் லிங்க வடிவிலும் இங்கு அமைந்துள்ளனர்.



                                    ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Thursday 3 July 2014








                                                   ஓம் நமசிவாய  




                                                திருச்சிற்றம்பலம் 

           அமர்நீதி நாயனார் குரு பூஜை(03.07.2014)

 

பழையாறை என்னும் பழம்பெரும் பதியில் - வணிக குல மரபில் அமர்நீதியார் என்னும் சிவ அன்பர் தோன்றினார். வணிககுல மரபிற்கு ஏற்ப வியாபாரத்தில் வல்லமையுள்ளவராய், மேம்பட்டு விளங்கிய அவரிடமிருந்த பொன்னும், மணியும், முத்தும், வைரமும், துகிலும், அவரது செல்வச் சிறப்பையும், வெளிநாட்டினரோடு அவருக்கிருந்த வர்த்தகத் தொடர்பையும் உலகோர்க்கு எடுத்துக் காட்டின. இத்தகைய செல்வச் சிறப்பு பெற்ற அமர்நீதியார், சிவனடியார்களுக்குத் திருத்தொண்டு செய்வதையே, இலட்சியமாகக் கொண்டிருந்தார். அவர் தமது இல்லத்திற்கு வரும் அடியார்களுக்கு அமுது அளித்து, ஆடையும், அரைத் துண்டும், கோவணமும் அளித்து அளவிலா ஆனந்தம்  பெற்றார். பழையாறைக்குப் பக்கத்திலே உள்ள சிவத்தலம் திருநல்லூர். இவ்விடத்தில் ஆண்டுதோறும் அங்கு எழுந்தருளியிருக்கும் நீலகண்டப் பெருமானுக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இவ்விழாவிற்கு வெளியூர்களிலிருந்தெல்லாம் பக்தர்கள் வெள்ளமெனத் திரண்டு வருவர். அமர்நீதியாரும் அவ்விழாவிற்குத் தம் குடும்பத்துடன் சென்று இறைவனை வழிபடுவார். அவ்வூரில் அடியார்களுக்கு என்றே திருமடம் ஒன்றை கட்டினார். ஒரு சமயம் அவ்வூர் திருவிழாக் காலத்தில், அமர்நீதியார் தமது குடும்பத்தாரோடு மடத்தில் தங்கியிருந்தார். சிவனடியார்களுக்கு நல்ல பணிகள் புரியும் அமர்நீதியாரின் உயர்ந்த பண்பினை - பக்திப் பெருக்கினை உலகறியச் செய்யத் திருவுள்ளம் கொண்டார் சிவபெருமான்.
அந்தண பிரம்மச்சாரி போன்ற திருவுருவம் பூண்டு, அவர் தங்கியிருந்த மடத்திற்கு எழுந்தருளினார். அமர்நீதியார் அடியாரைப் பார்த்ததும் மகிழ்ச்சயோடு வரவேற்று தேவரீர் இம்மடத்திற்கு இப்போதுதான் முதல் தடவையாக வருகிறீர் என்று கருதுகிறேன். அடியார் இங்கே எழுந்தருளுவதற்கு யான் செய்த தவம்தான் என்னவோ ! என முகமன் கூறி வரவேற்றார். அவர் மொழிந்ததைக் கேட்டு எம்பெருமான், அடியார்களுக்கு அமுதளிப்பதோடு, கந்தை, கீவ், அழகிய வெண்மையான கோவணம் முதலியனவும் தருகின்றீர் என்று கேள்வியுற்றுத்தான் உம்மைப் பார்த்துவிட்டுப் போக வந்தேன் என்று பதிலுரைத்தார். அம்மையப்பரின் அருள் வாக்கு கேட்டு மகிழ்ந்த அமர்நீதியார் உள்ளங்குளிர, மடத்தில் அநதணர்களுக்காக வேதியர்களால் தனியாக அமுது செய்கின்றோம். அதனால் ஐயன் தயவு கூர்ந்து திருவமுது செய்து அருள வேண்டும் என்று பக்திப் பரவசத்தோடு வேண்டினார். நன்று நன்று, உமது விருப்பத்தை யாம் உளமாற ஏற்கின்றோம். முதலில் யாம் காவிரியில் நீராடச் செல்ல இருக்கின்றோம். அதற்கு முன் ஒரு சிறு நிபந்தனை. என்ன சுவாமி ! ஒன்றும் இல்லை. வானம் மப்பும் மந்தாரமுமாக இருப்பதால் ஒருக்கால் மழை வந்தாலும் வரலாம். இக்கோவணம் இரண்டும் நனைந்து போக நேரிடும். அதனால் ஒன்றை மட்டும் கொடுத்து விட்டுப் போகிறேன்.
பாதுகாப்பாக வைத்திருந்து தரவேண்டும். இந்தக் கோவணத்தைச் சர்வ சாதாரணமாக எண்ணி விடாதீர். இதன் பெருமையைப் பற்றி அப்படி, இப்படி என்று எடுத்து இயம்புவது அரிது. இவ்வாறு சொன்ன பெருமான், தண்டத்தில் இருந்த கோவணங்களில் ஒன்றை அவிழ்த்து, அமர்நீதியாரிடம் கொடுத்துவிட்டு, நீராடி வரக் காவிரிக்குப் புறப்பட்டார். வேதியர் மொழிந்ததை மனதில் கொண்ட அமர்நீதியார் அக்கோவணத்தை மற்ற கோவணங்களோடு சேர்த்து வைக்காமல் தனிப்பட்ட இடத்தில் தக்க பாதுகாப்பாக வைத்தார். அடியார்களைச் சோதிப்பதையே தமது திருவிளையாட்டாகக் கொண்ட பெருமான், திருநீலகண்டரிடம் கொடுத்துவிட்டுச் சென்ற திருவோட்டை அன்று மறைத்தது போல், இன்று இவ் வணிகரிடம் கொடுத்த கோவணத்தையும் மாயமாக மறையச் செய்தார். அத்தோடு நிறுத்தவில்லை. தமது சோதனையை ! அன்று பகீரதனுக்காகக் கங்கையைப் பெருக விட்ட பெருமான் இன்று வணிகனைச் சோதிக்க திடீரென்று மழையையும் வரவழைத்தார். முதல்வோன், கங்கையில் தான் நீராடினாரோ, இல்லை காவிரியில்தான் நீராடினாரோ அல்லது நம் மாமனது திருவிடத்திலே பாய்ந்தோடும் வற்றாத வைகை நதியில்தான் நீராடினாரோ அவருக்குத்தான் வெளிச்சம் ! சற்று நேரத்திற்கெல்லாம் மழையில் நனைந்து கொண்டே, மடத்தை வந்தடைந்தார். அதற்குள் அமர்நீதியார், அடியார்க்கு வேண்டிய அறுசுவை உண்டியைப் பக்குவமாகச் சமைத்து வைத்திருந்தார். அடியார் மழையில் நனைந்து வருவதைக் கண்டு மனம் பதறிப்போன அமர்நீதியார், விரைந்து சென்று அடியார் மேனிதனைத் துவட்டிக் கொள்ளத் துணிதனைக் கொடுத்தார். இதெல்லாம் எதற்கு ? முதலில் நான் கொடுத்து கோவணத்தை எடுத்து வாரும், எதிர்பாராமல் மழை பெய்ததால் எல்லாம் ஈரமாகிவிட்டது என்றார் இறைவன்.
அமர்நீதியார் கோவணத்தை எடுத்து வர உள்ளே சென்றார். வேதியரின் சூது மொழியை, அமர்நீதியார் எப்படி புரிந்து கொள்ள முடியும் ? இறைவனின் கொவ்வைச் செவ்வாய் இதழ்களிலே குமிழ்ச் சிரிப்பு சிறிது நேரம் நர்த்தனம் புரிந்தது. அமர்நீதியார் சென்று, கோவணத்தைத் தாம் வைத்திருந்த இடத்தில் பார்த்தார். அங்கு கோவணத்தைக் காணவில்லை. சுற்றும் முற்றும் தேடிப் பார்த்தார். எங்குமே காணவில்லை. யாராவது எடுத்திருக்கக் கூடுமோ ? என்று ஐயமுற்று அனைவரையும் கேட்டுப் பார்த்தார், பலனேதுமில்லை. அமர்நீதியாரும், அவர் மனைவியாரும் செய்வதறியாது திகைத்தனர். மனைவியோடு கலந்து ஆலோசித்து இறுதியில் மற்றொரு அழகிய, புதிய கோவணத்தை எடுத்துக்கொண்டு, வேதியர் முன் சென்று, வேதனை முகத்தில் தோன்ற, தலைகுனிந்து நின்றார். கண்களில் நீர்மல்க அந்தணரை நோக்கி, ஐயனே ! எம்மை அறியாமலே நடந்த தவற்றைப் பொறுத்தருள வேண்டும் என்றார் அமர்நீதியார். அமர்நீதியார் மொழிந்ததைக் கேட்ட செஞ்சடையான், என்ன சொல்கிறீர் ? எமக்கு ஒன்றுமே புரிய வில்லையே ! என்றார். ஐயனே ! தங்களிடம் இருந்து பெற்றுக் கொண்ட கோவணத்தைப் பாதுகாப்பான இடத்தில்தான் வைத்திருந்தேன். ஆனால், இப்பொழுது போய்ப் பார்த்தால் வைத்திருந்த இடத்தில் அதைக் காணவில்லை. பெரும் வியப்பாகத்தான் இருக்கிறது. அதனால் தேவரீர் இதனை அணிந்துகொண்டு எம் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று மிகத் தாழ்மையோடு மனம் உருகி வேண்டினார்.
 அமர்நீதியாரின் இவ்வார்த்தைகளைக் கேட்டதும், எம்பெருமானின் திருமுகத்திலே கோபம் கொழுந்து விட்டெரியத் தொடங்கியது. நன்றாக உளது உமது பேச்சு. சற்று முன்னால் கொடுத்துச் சென்ற கோவணம் அதற்குள் எப்படிக் காணாமற் போகுமாம் ? நான் மகிமை பொருந்திய கோவணம் என்று சொன்னதால், அதனை நீரே எடுத்துக்கொண்டு, மற்றொரு கோவணத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றலாம் என்று நினைக்கிறீரோ ? இந்த நிலையில் நீர் அடியார்களுக்குக் கோவணம் கொடுப்பதாக ஊரெல்லாம் முரசு முழுக்குகின்றீரோ ! கொள்ளை லாபம் கொழிக்க, நீர் நடத்தும் வஞ்சக வாணிபத்தைப்பற்றி இப்போது அல்லவா எனக்குப் புரிகிறது. உம்மை நம்பி நான் அல்லவா மோசம் போனேன் ! மதுரை மீனாட்சி அம்மன் கைப்பிடிக்க, வளையல் வியாபாரியாக வந்த சோமசுந்தரக் கடவுள் அமர்நீதியாரின் வாணிபத்தைப் பற்றி மேற்கண்டவாறு கடிந்து கூறினார். எம்பெருமான் மொழிந்ததைக் கேட்டு அஞ்சி நடுங்கிய அமர்நீதியார், அறியாது நடந்த பிழையை மன்னித்து பொறுத்தருள வேண்டும். இவ்வெளியோன் வேண்டுமென்றே செய்யவில்லை. காணாமற் போன கோவணத்திற்கு ஈடாக அழகிய, விலை உயர்ந்த பட்டாடைகளும், பொன்மணிகளும் எவ்வளவு வேண்டுமாயினும் தருகின்றேன். ஐயன் எங்ஙனமாகிலும் சினம் தணிந்து எம்மைப் பொறுத்தருள வேண்டும். என்று பயபக்தியுடன் பிரார்த்தித்தார்.
பன்முறை மன்னிப்புக் கேட்டார். அடியாரை வீழ்ந்து வீழ்ந்து வணங்கினார். அமர்நீதியார், கல்லும் கரையக் கெஞ்சுவது கண்டு, சினம் சற்று தணிந்தாற்போல் பாவனை செய்த வேதியர், தண்டில் இருக்கும் நனைந்த கோவணத்தைக் காட்டி, இது உம்மிடம் கொடுத்த கோவணத்தோடு கொடுத்தால் அதுவே போதுமானது. பொன்னும் பொருளும் எமக்கு எதற்கு என்று மொழிந்தார். இறைவனின் தீர்ப்பைக் கேட்டு அமர்நீதியார் சற்று மன அமைதி கொண்டார். உள்ளே சென்று துலாக்கோலை எடுத்து வந்து மறையவர் முன் நாட்டினார். அந்தணரிடமிருந்த கோவணத்தை வாங்கி ஒரு தட்டிலும் தம் கையில் வைத்திருந்த கோவணத்தை மற்றொரு தட்டிலுமாக வைத்தார். நிறை சரியாக இல்லை. அதுகண்டு அமர்நீதியார் அடியார்களுக்கு அளிப்பதற்காக வைத்திருந்த கோவணங்களை எடுத்து வந்து வைத்தார். அப்பொழுதும் நிறை சரியாக நிற்கவில்லை அமர்நீதி நாயனாரின் தட்டு உயர்ந்தேயிருந்தது. ஒவ்வொன்றாக மற்ற கோவணமனைத்தையும் தட்டில் வைத்துக்கொண்டே வந்தார். எடை சமமாகவே இல்லை. அந்தணரின் கோவணம் இருந்த தட்டு தாழ்ந்தே இருந்தது. அம்மாயத்தைக் கண்டு வியந்தார் அமர்நீதியார். இஃது உலகத்திலே இல்லாத பெரும் மாயையாக இருக்கிறதே என்று எண்ணியவாறு தொடர்ந்து நூல் பொதிகளையும், பட்டாடைகளையும் கீள்களையும் ஒவ்வொன்றாக அடுக்கடுக்காகத் தட்டில் வைத்துக் கொண்டே போனார்.
எவ்வளவுதான் வைத்தபோதும் எடை மட்டும் சரியாகவே இல்லை. அமர்நீதியார் தட்டு உயர்ந்தும், சிவனார் தட்டு தாழ்ந்தும் இருப்பதைப் பார்க்கும்போது, அமர்நீதியார் அடியார்களிடம் கொண்டுள்ள பக்தியும், அன்பும் உயர்ந்துள்ளது என்பதையும், அத்தகைய பக்திக்கு முன்னால் இறைவனின் சோதனைகூடச் சற்றுத் தாழ்ந்துதான் உள்ளது என்ற உண்மையை உணர்த்துவதுபோல் தோன்றியது. மடத்திலிருக்கும் அனைவரும் இக்காட்சியைக் கண்டு வியந்து நின்றனர். தராசுத் தட்டின் மீது இறைவனால் வைக்கப்பட்டுள்ள கோவணத்தின் மகிமையை யார்தான் அறிய முடியும் ? வேதத்தையல்லவா ? ஈரேழு உலகமும் அதற்கு ஈடு இணையாகாதே ! அன்பர்களின் அன்பிற்குத் தானே அது கட்டுப்படும் ! இறைவனின் இத்தகைய மாய ஜால வித்தையை உணரச் சக்தியற்ற தொண்டர் சித்தம் கலங்கினார். செய்வதறியாது திகைத்தார். தொண்டர் நல்லதொரு முடிவிற்கு வந்தார். பொன்னும் பொருளும், வெள்ளியும், வைரமும், நவமணித் திரளும் மற்றும் பலவகையான உலோகங்களையும் கொண்டுவந்து குவித்தார். தட்டுக்கள் சமமாகவில்லை. தம்மிடமுள்ள எல்லாப் பொருட்களையும் தராசு தட்டில் கொண்டுவந்து வைத்து மலைபோல் குவித்தார். இப்படியாக அவரிடமுள்ள பொருள்கள் அனைத்தும் ஒரு வழியாகத் தீர்ந்தது. இனிமேல் எஞ்சியிருப்பது தொண்டரின் குடும்பம் ஒன்றுதான் ! அமர்நீதியார் சற்றும் மன உறுதி தளரவில்லை. இறைவனை மனதிலே தியானித்தார்.
ஐயனே ! எம்மிடம் இருந்த பொருள்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. நானும், என் மனைவியும், குழந்தையும் தான் மிகுந்துள்ளோம். இந்தக் தராசு சமமான அளவு காட்ட, நாங்கள் தட்டில் உட்கார தேவரீர் இயைந்தருள வேண்டும் என்று வேண்டினார் நாயனார். பிறவிப் பெருங்கடலில் நின்றும் தம் தொண்டனைக் கரையேற்றும் பொருட்டு தராசில் குடும்பத்தோடு சேர்ந்து அமர அனுமதி கொடுத்தார் எம்பெருமான். அமர்நீதியாரும், அவரது மனைவியாரும், மகனும் அடியாரின் பாதங்களில் ஒருங்கே வீழ்ந்து வணங்கி எழுந்தனர். நாங்கள் திருவெண்ணீற்றில் உண்மையான பக்தியுடன் இதுகாறும் பிழை ஏதும் புரியாமல் வாழ்ந்து வந்தோம் என்பது சத்தியமானால் இந்தத் தராசு சமமாக நிற்றல் வேண்டும் என்று கூறினார். திருநல்லூர் பெருமானைப் பணிந்தார். நமச்சிவாய நாமத்தை தியானித்தவாறு தட்டின் மீது ஏறி அமர்ந்தார். அவரைத் தொடர்ந்து மனைவியாரும், மகனும் பரமனை நினைத்த மனத்தோடு ஏறி அமர்ந்தனர். மூவரும் கண்களை மூடிக்கொண்டு, ஐந்தெழுத்து மந்திரத்தை மனத்தால் முறைப்படி ஓதினர். துலாக்கோலின் இரண்டு தட்டுகளும் சமமாக நின்றன. மூவரும் கண் திறந்தனர்.அதற்குள் முக்கண்ணன் மாயமாய் மறைந்தார். அந்தணரைக் காணாது அனைவரும் பெருத்த வியப்பில் மூழ்கினார், அப்போது வானத்திலே தூய ஒளி பிரகாசித்தது. நீலகண்டப் பெருமான் உமாதேவியாருடன் விடையின் மீது காட்சி அளித்தார். விண்ணவர் கற்ப பூக்களை மழைபோல் பொழிய மறைகள் முரசுபோல் முழங்கின. வணிகரும், மனைவியாரும், மகனும் துலாத்தட்டில் மெய்மறந்து இருந்தபடியே சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டேயிருந்தனர். இறைவனின் அருளினால் துலாத்தட்டு புட்பக விமானமாக மாறியது. அமர்நீதியார் குடும்பம் அப்புட்பக விமானத்தில் கைலயங்கிரியை அடைந்தது. அமர்நீதியார் இறைவனின் திருவடித்தாமரை நீழலிலே இன்புற்று வாழலானார்.

குருபூஜை: அமர்நீதி நாயனாரின் குருபூஜை ஆனி மாதம் பூரம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

           அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக்கு அடியேன்.

      
           
                 ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்

Wednesday 2 July 2014

                                                 ஓம் நமசிவாய  



                                                திருச்சிற்றம்பலம் 
                                         அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில்

[Image1]
 
 
 
மூலவர்: மாணிக்கவாசகர்
  உற்சவர்: -
  அம்மன்/தாயார்: -
  தல விருட்சம்: -
  தீர்த்தம்: -
  ஆகமம்/பூஜை : -
  பழமை: 500 வருடங்களுக்குள்
  புராண பெயர்: -
  ஊர்: சின்னமனூர்
  மாவட்டம்: தேனி
  மாநிலம்: தமிழ்நாடு
 
பாடியவர்கள்:
     
  -  
     
 திருவிழா:
     
  ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று மாணிக்கவாசகருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.  
     
 தல சிறப்பு:
     
  சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, "கோரசனீஸ்வரர்' என்கின்றனர்.  
     
திறக்கும் நேரம்:
    
 காலை 7 மணி முதல் 10 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 
   
முகவரி:
   
  அருள்மிகு மாணிக்கவாசகர் திருக்கோயில் , சின்னமனூர் -625 515 தேனி மாவட்டம்.  
   
போன்:
   
  +91- 4554-249 480 
    
 பொது தகவல்:
     
  இத்தலத்திற்கு அருகில் அருள்மிகு ஆறுமுக நயினார் திருக்கோயில், கம்பராயப்பெருமாள் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், திருமலையராயப்பெருமாள் திருக்கோயில், கவுமாரியம்மன் திருக்கோயில், சாமாண்டியம்மன் திருக்கோயில் ஆகிய திருத்தலங்கள் அமைந்துள்ளன.   
     
 
பிரார்த்தனை
    
  அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கவும், திக்குவாய் குறை உள்ளவர்கள் சரியாகவும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
 
    
நேர்த்திக்கடன்:
    
  பிரார்த்தனை நிறைவேறியதும் வஸ்திரம் சாத்தி, அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். 
    
 தலபெருமை:
     
  குரு அம்சம்: மாணிக்கவாசகர் நின்றகோலத்தில் தெற்கு நோக்கி, குரு அம்சத்துடன் இருக்கிறார். ருத்ராட்ச மாலை அணிந்து, வலது கையில் ஜெபமாலையுடன் சின்முத்திரை காட்டி, இடது கையில் ஏடுடன் இருக்கிறார். காசிவிஸ்வநாதர், விசாலாட்சி இருவரும் பரிவார மூர்த்திகளாக இருக்கின்றனர். இவரிடம் வேண்டிக் கொள்ள அறிவார்ந்த குழந்தைகள் பிறக்கும் என்பது நம்பிக்கை. குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு வேண்டிக் கொண்டால் அவர்களது கல்வி சிறக்கும்.ஒவ்வொரு தமிழ் மாதமும் மக நட்சத்திரத்தன்று இவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தமிழால், சிவனருள் பெற்றவர் என்பதால் இவருக்கு தமிழிலேயே அர்ச்சனை செய்யப் படுகிறது. விழாக்களின்போது இவர் மந்திரி அலங்காரத்தில் பவனி வருகிறார். ஆனி, மார்கழிமாத உத்திர நட்சத்திரத்தில் மாணிக்கவாசகர், நடராஜர் இருவரும் ஒரே சப்பரத்தில் வீதியுலா செல்கின்றனர். குருபூஜையன்று தனித்து உலா வருவார். திக்குவாய் உள்ளவர்கள், இங்கு திருவாசகத்தின் ""திருச்சாழல்'' பதிகத்தை பாடி வேண்டுகின்றனர். நின்றகோலத்தில் சண்டிகேஸ்வரர்: சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால், இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். அருகில் ஒரு விநாயகரும் இருக்கிறார். சண்டிகேஸ்வரரின் நின்ற கோலத்தை காண்பது அபூர்வம். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார்.

இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை, "கோரசனீஸ்வரர்' என்கின்றனர். அடியார்களுக்கு சிவபூஜை: குருபூஜையின்போது, உச்சிக்காலத்தில் "மகேஸ்வர பூஜை' என்னும், சிவனடியார் பூஜை நடக்கும். சிவனடியார்களை சிவனாக பாவித்து திருநீறு, சந்தனம் பூசி மலர் தூவி தீபாராதனை செய்து விருந்து படைக்கின்றனர்.
 
     
  தல வரலாறு:
     
  மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் வசித்த சம்புபாதசிரியர், சிவஞானவதி தம்பதியரின் மகன் வாதவூரார். அவரை, மதுரையை ஆண்டஅரிமர்த்தன பாண்டியன் தனது அமைச்சராக்கி, "தென்னவன் பிரமராயன்' என்று பட்டம் சூட்டினான். அவரிடம் பொன்னும், பொருளும் கொடுத்து தனது படைக்கு குதிரைகள் வாங்கிவரும்படி அனுப்பினான்.

அவர் திருப்பெருந்துறை (ஆவுடையார்கோவில்) தலத்தை அடைந்தபோது, ஒரு குருந்த மரத்தின் அடியில் சிவபெருமான், குருவாக இருந்து சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார். அவரைக்கண்ட வாதவூரார் தன்னையறியாமல் அவருடன் ஒன்றி, திருவடியில் விழுந்து தன்னையும் சீடனாக ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார்.

சிவனும் அவருக்கு உபதேசம் செய்தார். மகிழ்ந்த மாணிக்கவாசகர் அவரைப் பற்றி பாடினார். அந்த பதிகங்களின் வாசகங்கள் மாணிக்கம் போல இருந்ததால் சிவன் அவருக்கு "மாணிக்கவாசகர்' என பெயர் சூட்டினார்.

தன்னை சிவனிடமே ஒப்படைத்த மாணிக்கவாசகர், மன்னன் அழைப்பை ஏற்று நாடு திரும்பினார். அவருக்காக சிவன் நரிகளை குதிரைகளாக மாற்றி, திருவிளையாடல் செய்து, அவற்றை மன்னனிடம் ஒப்படைத்தார். மீண்டும் அவை நரிகளாக மாறவே, மாணிக்கவாசகரை தண்டித்தான் மன்னன். சிவன், அவரைவிடுவிக்க திருவிளையாடல் செய்து, தனது பக்தனின் பெருமையை ஊரறியச் செய்தார். இப்படி புகழ் பெற்ற மாணிக்கவாசகர் இங்கு மூலவராக அருளுகிறார்.
 
     
சிறப்பம்சம்:
     
  அதிசயத்தின் அடிப்படையில்: சிவாலயங்களில் சண்டிகேஸ்வரர், அமர்ந்த நிலையில் இருப்பார். ஆனால்,இக்கோயிலில் இவர் சிவலிங்கத்தை வணங்கி நின்றபடி இருக்கிறார். சிவன் சன்னதி முன்பு சித்ரகுப்தர் வலது கையில் எழுத்தாணி, இடது கையில் ஏடு வைத்து தியான கோலத்தில் அருளுகிறார். இவரது சன்னதியில் ஆயுள்விருத்தி, சஷ்டியப்தபூர்த்தி ஹோமங்கள் செய்கின்றனர். நவக்கிரக மண்டபத்தில் உள்ள சனீஸ்வரர், கையில் கிளியுடன் காட்சி தருகிறார். கோரை பற்களுடன் கூடிய மற்றொரு சனீஸ்வரரை கோரசனீஸ்வரர்' என்கின்றனர்.
 
     


 மாணிக்கவாசகர்   குரு  பூஜை (02-07-2014)




திருவவதாரம்:

வையை யாற்றங்கரையில் மதுரை மாநகரத்திலிருந்து ஏழு கி.மீ. தொலைவில் திருவாதவூர் என்ற தலம் உள்ளது. இத்தலத்தில் இறைவன் வாதபுரீசுவரர் என்னும் திருநாமத்தோடு எழுந்தருளி யுள்ளார். இத்தலம் வாயு பூசித்த காரணத்தால் வாதபுரம் என வழங்கப் பெறுகிறது. இந்நகரில் அமாத்திய அந்தணர் குலத்தில் சிவநெறி பிறழாச் சிந்தையாளராகிய அந்தணர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் சம்புபாதா சிருதர். அவர் மனைவியாரின் பெயர் சிவஞானவதி என்பதாகும். இவ்விருவரும் இல்லறம் வழுவாது ஒழுகிவரும் நாளில் தென்னாட்டில் புறச் சமயமாகிய புத்தம் மேலோங்கி இருந்தது. சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்தது. இறைவன் திருவருளால் இவ் விருவருக்கும், சைவம் தழைக்கவும், வேத சிவாகம நெறிகள் விளங்க வும் திருமகனார் ஒருவர் திரு அவதாரம் செய்தருளினார். தாய் தந்தையார் மனம் மகிழ்ந்து அம்மகனார்க்கு ``திருவாதவூரர்`` என்னும் திருப்பெயர்ச் சூட்டினர்.


அமைச்சுரிமை யேற்றல்:

திருவாதவூரர்க்கு வயது ஏறஏறக் கலைஞானங்களும் நிரம்பின. பதினாறு வயதளவில் வாதவூரர் கலைஞானங்கள் அனைத் தும் கைவரப்பெற்றார். இவரது கல்வித் திறத்தையும், நல்லொழுக் கத்தையும், உற்றது கொண்டு மேல்வந்துறுபொருள் உணர்த்தும் அறிவின் திறனையும் கண்டு அனைவரும் வியந்தனர். அக்காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்டுவந்த மன்னன் அரிமர்த்தன பாண்டியன் என்பவனாவான். திருவாதவூரரது அறிவுத்திறனைக் கேள்வியுற்ற அரிமர்த்தன பாண்டியன் அவரைத் தனது அவைக்கு அழைத்து அள வளாவி, அவரது அறிவு நலனைக் கண்டு வியந்து ``தென்னவன் பிரம ராயன்`` என்னும் பட்டம் சூட்டித் தனது முதன் மந்திரியாக அமர்த்திக் கொண்டான். திருவாதவூரரும் இஃது இறைவனுடைய ஆணை யென்று எண்ணி அதனை ஏற்றுக்கொண்டு அமைச்சுரிமைத் தொழிலை மிகக் கவனத்தோடு இயற்றிவந்தார். வாதவூரது அமைச்சியலால் குடிமக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். வாதவூரரும், அரிமர்த்தன பாண்டியனுக்குக் கண்ணும் கவசமுமாக விளங்கி வந்தார்.

பதவியில் பற்றின்மை:

வாதவூரர் தமக்குக் கிடைத்த அமைச்சுரிமைத் தகுதியால் உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சி யடையவில்லை. உலக வாழ் வும் வாழ்வில் காணும் பெரும் போகமும் நிலையற்றவை என்றறிந் தமையால், அப்பதவியில் அவர்க்கு உவர்ப்புத் தோன்றியது. ``கூத்தினர் தன்மை வேறு கோலம் வேறு ஆகுமாறு போல`` இவர் மேற் கொண்டிருந்த அமைச்சுரிமைக்கும், இவருக்கும் தொடர்பில்லாமல் இருந்தது. ஒரு சிறந்த குருநாதரைத் தேடும் வேட்கை இவருக்கு மிகுந்து வந்தது. பிறவிப் பெரும் பயனை அடைதற்குரிய வழி என்ன என்பதிலேயே இவருடைய சிந்தனை சுழன்று கொண்டிருந்தது.

குதிரைகள் வாங்கச் செல்லல்:

ஒருநாள் வாதவூரர் அரசவையில் அமைச்சராய் வீற்றிருந்தார். அப்போது அரசனுடைய குதிரைச் சேவகர்கள் அங்கு வந்து `அரசரேறே! நமது குதிரைப் படைகள் குறைந்து விட்டன. வயது முதிர்ந்த குதிரைகளும், நோய் நிறைந்த குதிரைகளுமே இப்போது உள்ளன. சிறந்த குதிரைகள் நம்மிடம் இல்லை. ஆதலின் குதிரைப் படைகளைப் பலப்படுத்த வேண்டும் என்று நினைவுறுத்துவது எங்கள் கடமை` என்று வணங்கித் தெரிவித்துக் கொண்டார்கள். அப்போது அரசவையிலிருந்த சில தூதர்கள் கீழைக் கடற்கரையில் நல்ல குதிரைகள் வந்து இறங்கியிருக்கின்ற செய்தியை அரசனிடத்துத் தெரிவித்தார்கள். அரசன் அமைச்சர் பெருமானாகிய பிரமராயரைப் பார்த்து ``நம்முடைய கருவூலத்திலிருந்து வேண்டும் பொருள்களைப் பணியாளர் மூலம் எடுத்துச் சென்று நல்ல குதிரைகளை வாங்கி வருக`` என்று ஆணையிட்டான்.

வாதவூரரும் அக்கட்டளையை ஏற்றுப் பொற்பண்டாரத்தைத் திறந்து அளவிறந்த பொருள்களை ஒட்டகத்தின் மீதேற்றிக் கொண்டு, படைகளும் பரிசனங்களும் தன்னைச் சூழ்ந்துவர மதுரைச் சொக்கேசன் ஆலயத்திற்குச் சென்று வணங்கி மதுரையை விட்டுப் புறப்பட்டார். பல காதங்களைக் கடந்து திருப்பெருந் துறையென்னும் தலத்தை அடைந்தார். அவ்வூரை அணுக அணுக அவர்மேல் இருந்த ஏதோ ஒரு சுமை குறைந்து வருவது போலத் தோன்றியது. இத்தலமே இறைவன் தன்னை ஆட்கொள்ளும் இடம் போலும் என்ற உணர்வு தோன்றியது.

குரு உபதேசம்:

அவ்வேளையில் சிவநாம முழக்கம் எங்கிருந்தோ வருவது அவர் செவிகளுக்கு எட்டியது. அவ்வொலி வரும் திசைநோக்கி வாதவூரரும் விரைந்து சென்றார். ஓரிடத்தில் கல்லால மரம் போன்ற பெரியதொரு குருந்த மரத்தடியில் சீடர்கள் சிலரோடு சிவபெருமானே குருநாதராய் எழுந்தருளியிருந்தார். வேத சிவாகமங்களும், புராண இதிகாசச் சமய நூல்களும் ஆகிய பல நூல்களையும் கற்றுத்தெளிந்த சிவகணநாதர்கள் அக்குருநாதரிடம் சீடர்களாக விளங்கினர். அச் சீடர்களின் பாசமாம் பற்றறுக்கும், ஆசானாக அக்குருநாதர் வீற்றிருந்தார். அவரது வலத் திருக்கை சின்முத்திரையைக் காட்டிக் கொண்டிருந்தது. அவரது திருமுகம் ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள் திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன. (அவரது திருமுகம் ஒளி மண்டலமாகத் திகழ்ந்தது. அவரது கண்கள் திருவருள் விளக்கத்தைச் செய்து கொண்டிருந்தன) இவ்வாறு வீற்றிருந்த குருநாதரைக் கண்ட வாதவூரர் தாம் பலநாட்களாக விரும்பியிருந்த குருநாதர் இவரேயென்று எண்ணினார். காந்தம் கண்ட இரும்புபோல மணிவாசகர் மனம் குருநாதர் வசமாயிற்று. இந் நிலையில் விரைந்து அருகிற்சென்ற வாதவூரர் அடியற்ற மரம்போல அவரது திருவடியில் வீழ்ந்து பணிந்தார். `ஐயனே! எளியேனை ஆட்கொண்டருளுக` என வேண்டி நின்றார்.

வாதவூரரின் பரிபாக நிலையைக் கண்ட குருநாதர் திருக்கண் நோக்கம், பரிசம் முதலிய தீட்சைகள் செய்து திருவடிசூட்டித் திருவைந்தெழுத்தை அவருக்கு உபதேசம் செய்தருளினார். இவ்வாறு தம்மை ஆட்கொண்டருளிய பெருங்கருணைத் திறத்தை வியந்த வாதவூரர் அன்போடு குரு நாதருடைய திருவடிகளை மீண்டும் வணங்கி எழுந்து நின்றார். ஞானாசிரியரது திருவருள் நோக்கால், ஞானத்தின் திருவுருவாக வாதவூரர் மாறினார். தமது குருநாதரின் திருவடிகளுக்குத் தம்மை ஆட்கொண்ட கருணையைக் குறித்துச் சொல்மாலைகள் பலவும் சூட்டினார்.

மாணிக்கவாசகர்:

ஞானாசிரியர் திருமுன் வாதவூரர் பாடிய தோத்திரங்கள் இனிமையோடு கேட்போர் மனத்தையுருக்கும் அருள் விளக்கத் தோடும் இருந்த காரணத்தால் ஞானாசிரியர் வாதவூரரை நோக்கி ``உனக்கு `மாணிக்கவாசகன்` என்ற பெயர் தந்தோம்`` என்று கூறி அவருக்கு அப்பெயரைத் தீட்சா நாமமாகச் சூட்டினார். அன்று முதல் வாதவூரர் என்ற திருப்பெயருடன் மாணிக்க வாசகர் என்ற பெயரும் அவருக்கு வழங்குவதாயிற்று.

திருப்பெருந்துறைத் திருப்பணி:

மணிவாசகர் குருநாதரை வணங்கி `என்னை ஆட்கொண்ட போதே என்னுயிரும் உடைமையும் தங்கட்குரியவாயின. ஆதலால் அடியேன் கொண்டு வந்த பொருள்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு அருளல் வேண்டும்` என்று குறையிரந்தார். குருநாதரும் `அப்பொருள்களைக் கொண்டு சிவப்பணி செய்க` என்று அருளாணை யிட்டார். அக்கட்டளையின்படியே மணிவாசகர் அப்பொருள்களைக் கொண்டு திருப்பெருந்துறையில் மிகச் சிறந்த திருக்கோயிலைக் கட்டினார். திருவிழாக்கள் செய்தார். திருமடங்கள், திருநந்தவனங்கள் முதலியன அமைத்தார். அடியார்களுக்கு மாகேசுவரபூசை நிகழ்த் தினார். இவ்வாறு அரசன் குதிரை வாங்குவதற்குத் தம்மிடம் அளித்த பொருள்கள் அனைத்தையும் சிவப்பணிகளுக்கே செலவிட்டார். நாள்கள் பல சென்றன. மணிவாசகர் அருளாரமுதத்தை உண்டு கொண்டே தெருளார் சிவானந்த போகத்துத் திளைத்திருந்தார்.

அமைச்சரின் வேறுபட்ட நிலையை உடன் வந்தவர்கள் கண்டு மணிவாசகரிடம் `குதிரை கொண்டு மதுரை செல்லவேண்டுமே` என்று தாங்கள் எண்ணிவந்த செயலை நினைவூட்டினார். மணிவாசகர் அவ்வுரைகளைக் கேளாதவராய் இறைவழிபாட்டில் ஈடுபட்டிருப் பதை அறிந்த பணியாளர் மதுரை மாநகருக்குச் சென்று பாண்டியனி டம் நிகழ்ந்தவற்றைத் தெரிவித்தனர்.

பாண்டியன் அழைப்பு:

இச்செய்தியையறிந்த பாண்டியன் சினந்து திருமுகம் ஒன்று எழுதி அதை வாதவூரரிடம் சேர்ப்பித்து `அவரை அழைத்து வருக` என ஆணையிட்டுச் சிலரை ஏவினான். பணியாளரும் திருப்பெருந் துறையை அடைந்து அரசன் அளித்த திருமுகத்தை அமைச்சர் பிரானி டம் கொடுத்து அரசன் கட்டளையை அறிவித்து நின்றனர். அதைக் கேட்ட வாதவூரர் தம் குருநாதரிடம் சென்று நிகழ்ந்ததை விண்ணப் பித்து நின்றார். குருநாதர் புன்முருவல் பூத்து ``அஞ்சற்க, ஆவணி மூலத்தன்று குதிரைகள் வரும் என்று மன்னனிடம் அறிவித்து விலை யுயர்ந்த மாணிக்கக்கல்லையும் கையுறையாகக் கொடுக்க`` எனக் கூறி மாணிக்க மணியை அளித்து விடை கொடுத்தனுப்பினார். வாதவூரரும் குருநாதரைப் பிரிய மனமில்லாதவராய்ப் பிரியா விடைபெற்று மதுரைக்கு எழுந்தருளினார். அரசவைக்கு வந்த மணிவாசகர் இறைவன் அருளிய மாணிக்க மணியை மன்னனிடம் கொடுத்து, `வருகின்ற ஆவணிமூல நாளில் குதிரைகள் மதுரை வந்தடையும்` என்று கூறினார். அரசனும் சினம் மாறி மனம் மகிழ்ந்து அமைச்சரை அன்போடு வரவேற்று அருகிருந்து அவரை மகிழ்வித்தான்.

மணிவாசகரை மன்னன் ஒறுத்தல்:

ஆவணி மூலநாளை அரிமர்த்தனன் ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்கு இரண்டு நாள் முன்னர் அமைச் சருள் சிலர், `வாதவூரர் சொல்லியன அனைத்தும் பொய்யுரை; அவர் தங்களை ஏமாற்ற எண்ணுகின்றார். எடுத்துச் சென்ற பொருள்கள் அனைத்தையும் திருப்பெருந்துறையில் அரன் பணிக்காகச் செலவிட்டு விட்டார், அவர் கூறுவதை நம்ப வேண்டா`` என்று கூறினர். பாண்டியன் ஒற்றர்களை விடுத்து அவர் மூலம் அமைச்சர்கள் கூறியன அனைத்தும் உண்மையென்பதை அறிந்தான். வாதவூரர் செய்கையை எண்ணிச் சினந்து தண்டநாயகர் சிலரை அழைத்து வாதவூரர் பால் சென்று குதிரை வாங்கக்கொண்டுபோன பொருள்களை அனைத்தை யும் வற்புறுத்தித் திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு கட்டளை யிட்டான். அச்சேனைத் தலைவர்கள் வாதவூரரிடம் சென்று மன்னன் கட்டளையை எடுத்துக்கூறி அவரைத் துன்புறுத்தத் தலைப்பட்டனர். கொடுஞ்சிறையில் இட்டனர். சுடுவெயிலில் நிறுத்திக் கடுமையாக வருத்தினர். வாதவூரர் இறைவனைத் தியானித்து ஐயனே! ஆவணி மூலத்தன்று குதிரை கொண்டு வருவதாகக் கூறிய உன் உரை பொய் யாகுமோ? உன் அடித்தொண்டன் இவ்வாறு துன்புறுவது தகுதியா? என்னைக் கைவிடில் எனக்கு யார் துணை? அடியான் ஒருவன் துன்புறுவது உனக்குக் குறையல்லவா? என்றெல்லாம் இறைவனிடம் முறையிட்டு வருந்தினார்.

நரிகள் பரிகளாயின:

வாதவூரர்தம் வருத்தத்தைத் தணிக்கத் திருவுளம் கொண்ட பெருமான் நரிகளையெல்லாம் குதிரைகளாக மாற்றித் தேவர் களெல்லாம் குதிரைச் சேவகர்களாய்ப் புடைசூழத் தான் குதிரை வாணிகன் போலத் திருக்கோலம் கொண்டு வேதமாகிய குதிரையில் அமர்ந்து, மதுரையை நோக்கிப் புறப்பட்டான். குதிரைப் படைகள் மதுரை நோக்கிப் புறப்பட்டன. குதிரைப் படைகள் மதுரை நோக்கி வருவதை ஒற்றர்கள் மூலம் மன்னன் அறிந்தான். அவன் மனம் மகிழ்ந்தது. திருவாதவூரரைத் தவறாகத் தண்டித்து விட்டோமோ? என்று வருந்தி அவரை விடுவித்தான். அரசவையில் அவரை அன்போடு வரவேற்று முகமன்கூறி அருகிருத்தினான்.

பாண்டியன் பரிசு:

கடல் அலைகள்போல் வந்த படைகளின் விரைந்த நடையால் எழுந்த புழுதிப் படலம் வானை மறைத்தது. குதிரைக்கூட்டம் மதுரை மாநகரை அடைந்தது. வாணிகத் தலைவனாக வந்த சிவபிரான் பாண்டியன் முன்னிலையில் குதிரைகளனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தினான். குதிரைகளைப் பல வகை நடைகளில் நடத்திக் காட்டியும், ஆடல்கள் புரியச் செய்தும் பாண்டியனை மகிழ்வுறுத் தினான். பெருமகிழ்ச்சியடைந்த பாண்டியன் குதிரைத் தலைவனுக்கு ஒரு பட்டாடையைப் பரிசாகக் கொடுத்தான். குதிரைத் தலைவனாக வந்த பெருமான் அப்பரிசைப் புன்னகையோடு தன் செண்டினால் வாங்கினான். தான் அளித்த பரிசை மரியாதைக் குறைவாகக் குதிரைத் தலைவன் பெறுவதைக் கண்ட மன்னன் வெகுண்டான். அருகிலிருந்த வாதவூரர் `செண்டினால் பரிசு பெறுதல் அவர்கள் நாட்டு வழக்கு` என்றுகூறி, மன்னன் சினத்தை மாற்றினார். பின்னர் குதிரை இலக்கணமறிந்த புலவர்கள் குதிரைகளை யெல்லாம் இவைகள் நல்ல நிறமும், நடையும், நல்ல சுழிகளும் பெற்றுள்ளன என்று பாராட்டினர். அரசனும் தானளித்த பொருளைவிடப் பல மடங்கு அதிகமான குதிரைகளைப் பெற்றதாக மகிழ்ந்து அவைகளைப் பந்தியில் சேர்க்குமாறு பணித்தனன். வணிகர் தலைவன் குதிரைகளையெல்லாம் கயிறுமாறிக் கொடுக்கும்படித் தன்னுடன் வந்தவர்களிடம் கூறி அரசனிடம் விடைபெற்றுச் சென்றான்.

பரிகள் நரிகளாயின:

அன்று இரவு நடுநிசியில் குதிரைகளெல்லாம் நரிகளாக மாறின. பந்தியில் இருந்த பழைய குதிரைகளையும் கொன்று தின்று ஊர்மக்கள் அஞ்சும்படி மூலை முடுக்களில் எல்லாம் ஓடி மறைந்தன. காலையில் குதிரைச் சேவகர்கள் உள்ளம் பதறி, உடல் நடுங்கி, அரசனிடம் வந்து முறையிட்டனர். இச்செய்தியைக் கேட்ட மன்னன் சினம் பொங்கி அமைச்சர்களை அழைத்து திருவாதவூரர் செய்த வஞ்சனையைக் கூறிப் படைத்தலைவர்களை அழைத்து, வாதவூரரைச் சுடுவெயிலில் நிறுத்தித் தண்டனை அளித்து அவரிடத்தில் கொடுத்த பொருள்களை யெல்லாம் திரும்பப் பெற்றுக்கொண்டு வருமாறு உத்தர விட்டான். படைவீரர்கள் இவரை அழைத்துச் சென்று சுடுவெயிலில் நிறுத்தித் தலையிலே கல்லேற்றி ஒறுத்தார்கள். வாதவூரர் இறைவன் திருவருளை நினைந்து எனக்கு இத்தகைய துன்பங்கள் வருதல் முறையாகுமோ? என்று கூறி வருந்தி நின்றார்.

வைகையில் வெள்ளம்:

வாதவூரருடைய துன்பம் துடைக்க எண்ணிய பெருமான், வையையாற்றில் வெள்ளம் பெருகுமாறு செய்தருளினார். வையை யில் தோன்றிய பெருவெள்ளம் மதுரைமாநகர் முழுவதும் விரைந்து பரவத்தொடங்கியது. பெரு வெள்ளத்தைக் கண்ட ஊர்மக்கள் ஊழிக்காலமே வந்துவிட்டதென்று அஞ்சி மன்னனிடம் சென்று முறையிட்டனர். பாண்டியனும் ஆற்றுவெள்ளத்தைத் தணிக்க, பூ, பொன், பட்டு முதலிய அணிகலன்களை ஆற்றில் விட்டு வெள்ளம் தணியுமாறு ஆற்றைப் பணிந்தனன். வெள்ளம் மேலும் பெருகிய தேயல்லாமல் சிறிதும் குறையாதது கண்டு அமைச்சர்களோடு கூடி ஆராய்ந்து சிவனடியாராகிய வாதவூரரைத் துன்புறுத்தியதன் விளைவே இது என்று நன்கு தெளிந்து அவரை விடுவித்து மதுரை மாநகரை இவ்வெள்ள நீர் அழிக்காதவாறு காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். வாதவூரரும் திருவருளை எண்ணி வழுத் தினார். வெள்ளத்தின் வேகம் ஒரு சிறிது குறைந்தது. இருப்பினும் முற்றும் வெள்ளம் குறையவில்லை. அதைக்கண்ட பாண்டியன் மதுரை மக்களையெல்லாம் ஒருங்குகூட்டி ஒவ்வொருவருக்கும் இவ்வளவு பங்கு என்று அளந்து கொடுத்து ஆற்றின் கரையை அடைக்கும்படி ஆணையிட்டான்.

மண் சுமந்தது:

அரசன் ஆணையைக் காவலர் ஊர் முழுவதும் முரசறைந்து அறிவித்தனர். அந்நகரில் பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி என்னும் மூதாட்டி தனக்கு அளவு செய்துவிட்ட ஆற்றின் பங்கை அடைக்க ஆள் கிடைக்காமல் வருந்தினாள். நாள்தோறும் ஆண்டவ னிடம் அன்பு செலுத்தி வந்த அவ்வந்தியின் துன்பத்தைத் தவிர்க்க இறைவன் அவளிடம் கூலி ஆள் போலத் தோன்றினான், `யாரேனும் கூலி கொடுத்து என் வேலை கொள்வார் உண்டோ?` என்று கூவிய வண்ணம் தன்னை வந்தடைந்த அப்பணியாளனைக் கண்ட வந்தி மகிழ்ந்து, `நீ எனக்குக் கூலியாளாக வரவேண்டும்; அவ்வாறு வந்து என் ஆற்றின் பங்கை அடைத்துத் தருவாயானால் நான் விற்கும் பிட்டைக் கூலியாகத் தருகிறேன்` என்று கூறினாள். அதற்கு இசைந்த அக் கூலியாள் அவள் கொடுத்த பிட்டை வாங்கி உண்டு, தாயே! என் பசி தீர்ந்தது; இனி நீ ஏவிய பணியை நான் செய்து முடிப்பேன் என்று அவன் பங்கை அறிந்து அதை அடைப்பதற்கு முற்பட்டான்.

பாண்டியன் பிரம்படி:

வேலையைத் தொடங்கிய அவ் வந்தியின் ஆளாகிய சிவபெருமான் மண்ணை வெட்டித் தன் திருமுடியில் எடுத்துச் சென்று கரையில் கொட்டிவிட்டுக் களைப்படைந்தவன்போல ஓய்வு எடுத்துக் கொள்வதும், வந்தி அளித்த பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடு வதும் செய்து பொழுது போக்கினான். வேலை செய்து களைத்தவன் போலக் கூடையைத் தலையணையாக வைத்து உறங்கவும் செய்தான். ஆற்றின் கரை அடைபட்டதா என்பதைப் பார்வையிட வந்த மன்னனிடம் காவலர், ஊரில் உள்ளோர் ஒவ்வொருவரும் தத்தம் பங்கை அடைத்து முடித்தனர். பிட்டு விற்கும் வந்தியென்னும் கிழவி யின் பங்கு மட்டும் அடைபடாமல் கிடக்கிறது. வந்திக்கு ஆளாய் வந்த ஒருவன் சரிவரத் தன் பணியைச் செய்யாமல் பொழுதைக் கழிக்கிறான்; அதனால் அப்பகுதி நூற்றைக் கெடுத்தது குறுணி என்பது போல, ஒருத்தி பங்கு ஊரார் பங்கையும் கரைக்கிறது என்று கூறினர். உடனே அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன் அக்கூலியாளை அழைத்து வரச்செய்து தன்னுடைய கைப்பிரம்பால் முதுகில் அடித்தான். அடித்த அளவில் கூலியாளாக வந்த பெருமான் ஒருகூடை மண்ணை உடைப்பிற்கொட்டி மறைந்தான், பாண்டியன் அடித்த அப்பிரம்படி அரசன், அரசி, அமைச்சர், காவலாளர்கள் முதலிய எல்லோர் மேலும் பட்டது. அண்ட சராசரப் பொருள் அனைத்தின் மேலும் பட்டது. அப்போது வாதவூரர் இறைவன் தன் அடியவர் பொருட்டுக் கூலியாளாக வந்த திருவருளை எண்ணி வியந்தார். பாண்டிய மன்னன் வாதவூரர் பெருமையை நன்கறிந்து அவரை வணங்கி, `நற்றவப் பெரியீர்! எனக்கு அமைச்சராய் இருந்து அமர்ந்து எம் குலதெய்வத்தை என் கண்ணாரக்காட்டிக் குதிரைச் சேவகனாக வும், கூலியாளாகவும் வரச்செய்து என் பிறவி மாசை ஒழித்த பெரியவரே, என்னை மன்னித்தருள வேண்டும். தங்கள் பெருமையை இறைவன் எனக்கு நன்குணர்த்தினான். என் அரசுரிமையை இன்று முதல் தாங்கள் ஏற்றருளல் வேண்டும்` என்று வேண்டினான். வாதவூரர் பாண்டியனிடம் `இறைவனுடைய திருவடித்தொண்டு செய்ய என்னை உரிமையாக்குவதே இவ்வுலக ஆட்சியை எனக்குத் தருவதற்கு ஒப்பாகும்` என்றார். மன்னனும் அவர் விரும்பியவாறு அவரைச் செல்லவிடுத்துத் திருவருள் உணர்வோடு தம் அரண்மனைக்குச் சென்றான்.

அமைச்சியலைத் துறந்து தவ வேடம் தாங்கிய வாதவூரடிகள் இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்தவராய், திருப் பெருந்துறையை அடைந்தார்.

குருநாதர் பிரிவு:

மீண்டும் தன் குருநாதரை அடைந்த வாதவூரடிகள் அடியவர் கூட்டத்தோடு கலந்து மகிழ்ந்திருந்தார். ஞானதேசிகனாய் வந்த பெருமான் தாம் கயிலைக்குச் செல்ல வேண்டியதைச் சீடர்களுக்கு உணர்த்தி அவர்களை இன்புற்றிருக்குமாறு பணித்தார். அடியவர்கள் தம் குருநாதரைப் பிரிய மனம் இல்லாமல் பெரிதும் வருந்தினர். அதைக் கண்ட குருநாதர் இக் குருந்த மரத்தின் நிழலில் ஒரு தெய்வப் பீடம் அமைத்து அதில் நம்முடைய திருவடிகளை எழுப்பி வழிபாடு செய்து வருவீர்களானால் ஒருநாள் `இக்கோயில் திருக்குளத்தில் தீப் பிழம்பு ஒன்று தோன்றும்; அதில் அனைவரும் மூழ்கி எம்மை அடையலாம்` என்று திருவாய் மலர்ந்து தம்மைப் பின்தொடர்ந்து வந்த அடியார்களை `நிற்க` எனக் கட்டளையிட்டுக் கயிலை சென்றார். வாதவூரடிகள் மட்டும் அவரைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். அவரைக்கண்ட குருநாதர், `நீ எம்மைப் பின் தொடர்ந்து வருதல் வேண்டா; உத்தர கோசமங்கை என்னும் திருப்பதிக்குச் சென்று அங்கு எண்வகைச் சித்திகளையும் பெற்று, திருக் கழுக்குன்றம் முதலான தலங்களைத் தரிசித்துப் பின்னர் தில்லையை அடைவாயாக` என்று கூறிச்சென்றார். மணிவாசகரும் அவ்வாறே திருப்பெருந்துறைக் குருந்த மரத்தின்கீழ் ஒரு தெய்வீகப் பீடம் அமைத்து அதில் குருநாதரின் திருவடிகளை எழுந்தருளச் செய்து அடியார்களோடு தாமும் வழிபட்டு வரலாயினார்.

தல யாத்திரை:

மணிவாசகர் திருவருட் போகத்தில் திளைத்து வாழும் நாட்களில் 1. நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம், 2. அற்புதப் பத்து, 3. அதிசயப்பத்து, 4. குழைத்த பத்து, 5. சென்னிப் பத்து. 6. ஆசைப்பத்து, 7. வாழாப்பத்து, 8. அடைக்கலப் பத்து, 9. செத்திலாப் பத்து, 10. புணர்ச்சிப் பத்து, 11. அருட் பத்து, 12. திருவார்த்தை, 13. எண்ணப் பதிகம், 14. திருவெண்பா (பண்டாய நான்மறையும் இதில் சேர்க்கப்பட்டது), 15. திருப்பள்ளியெழுச்சி, 16. திருவேசறவு, 17. ஆனந்த மாலை, 18. உயிருண்ணிப்பத்து, 19. பிரார்த்தனைப் பத்து, 20. திருப்பாண்டிப் பதிகம் முதலிய பதிகங்களைத் திருவாய் மலர்ந்தருளி அடியார் கூட்டத்துடன் பலநாள் திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருந்தார். ஒருநாள் திருக்குளத்தில் தீப் பிழம்பு தோன்றிற்று. அடியார்கள் அனைவரும் ஐந்தெழுத்தை ஓதிக்கொண்டு அதில் மூழ்கினர். பெருமான் அம்மையப்பராய் இடப வாகனத்தில் எழுந்தருளி அருட் காட்சி வழங்கியருளினார். அடியார்கள் அனைவரும் மூழ்கிச் சிவகணங்களாயினர். மணிவாசகர் இவ்வேளையில் கொன்றை மர நிழலில் சிவயோகத்தில் அமர்ந் திருந்தார். இந்நிகழ்ச்சியை யோகக் காட்சியில் அறிந்த அடிகள் அடியார்களின் பிரிவாற்றாது வருந்தி, குருந்த மரத்தினடியில் இருந்த குருநாதரின் திருவடிப் பீடத்தைப் பற்றிக் கொண்டு அழுதார். 21. திருச் சதகம் என்னும் பாமாலையால் இறைவன் திருவருளைத் தோத் திரித்தார். பின்னர் குருநாதன் தனக்குப் பணித்த அருளாணையின் வண்ணம் திருவுத்தரகோசமங்கைக்குச் சென்று அங்கும் குருநாதரைக் காணாது வருந்தி 22. நீத்தல் விண்ணப்பம் என்னும் திருப்பதிகத்தால் தோத்திரம் செய்தார். அப்போது இறைவன் திருப்பெருந்துறையில் காட்டிய குருந்தமர் கோலத்தைக் காட்டியருளினார். அத்திருக் கோலத்தைக் கண்டு மகிழ்ந்த அடிகள், அங்குப் பல சித்திகளும் கைவரப் பெற்றார். பின்னர் பல திருப்பதிகளையும் வணங்கிக் கொண்டு பாண்டிய நாட்டைக் கடந்து சோழவளநாட்டைச் சேர்ந்த திருவிடை மருதூரை வந்தடைந்தார். இடைமருதில் ஆனந்தத் தேனாக எழுந் தருளியுள்ள இறைவன் அருள் நலத்தை நுகர்ந்து திருவாரூரை அடைந்து புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி, 23. திருப் புலம்பல் என்னும் பதிகத்தை அருளிச் செய்தார். அதன் பின்னர் சீகாழியை அடைந்து தோணியப்பரைத் தரிசித்து 24. பிடித்தபத்து என்னும் பதிகத்தை அருளிச்செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு, சோழநாடு கடந்து நடுநாட்டை அடைந்து திருமுதுகுன்றம், திரு வெண்ணெய் நல்லூர் முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு திருவண்ணாமலையை அடைந்தார். அங்கும் இறைவன் குருந்தமர் திருக்கோலம் காட்டியருளினான். அக்காட்சியைக் கண்டு வணங்கிய அடிகள் அத்தலத்தில் பலநாட்கள் தங்கியிருந்தார்.

திருவண்ணாமலையில்:

அடிகள் அண்ணாமலையில் தங்கியிருந்தபோது மார்கழி மாதம் வந்தது. திருவாதிரைக்கு முன் பத்து நாட்களில் கன்னிப் பெண்கள் விடியற்காலம் எழுந்து வீடுகள்தோறும் சென்று ஒருவரை யொருவர் துயிலெழுப்பிக் கொண்டு நீராடி வழிபாடு செய்வதைக் கண்டு அவர்கள் வாய் மொழியாகவே வைத்து 25. திருவெம் பாவையையும், அவ்வூர்ப் பெண்கள் அம்மானையாடும் காட்சியைக் கண்டு அவர்கள் பாடுவதாக வைத்து 26. திருவம்மானையையும் அருளினார்.

சிதம்பர தரிசனம்:

பின்னர் அண்ணாமலையை நீங்கிக் காஞ்சிபுரம் அடைந்து அவ்வூர் இறைவனைத் தரிசித்துத் திருக்கழுக்குன்றம் அடைந்து 27. திருக்கழுக்குன்றப் பதிகம் பாடினார். அங்கே பெருமான் பெருந்துறை யில் அவரை ஆட்கொண்ட குருநாதர் திருக்கோலத்தோடு காட்சி வழங்கினான். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுத் திருத்தில்லையின் எல்லையை அடைந்து அத் திருத்தலத்தைத் தரிசித்தார்.

தில்லை சிவ லோகம் போலக் காட்சியளித்தது. அந்நகரை யடைந்த மணிவாசகர் திருவீதிகளைக் கடந்து வடக்குத் திருவாயில் வழியே திருக் கோயிலுக்குள் சென்றார். சிவகங்கையில் நீராடி வலமாகச் சிற்சபை யில் எழுந்தருளியிருக்கும் ஆனந்த நடராசப் பெருமானை ஆறா அன்பினில் கண்டு கண்ணீர்வார உளம் நெகிழ்ந்து வணங்கினார். குரு நாதனாக எழுந்தருளி வந்து காட்சி கொடுத்த இறைவனைத் தில்லைச் சிற்றம்பலத்திலே கண்டு தரிசித்து பேரானந்தம் உற்று ஆனந்தக் கண்ணீர் பெருக 28. கண்ட பத்து என்னும் பதிகம் பாடி வழிபட்டார். பின்னர் தில்லையின் கீழ்த்திசையில் ஒரு தவச்சாலை அமைத்துப் பலநாட்கள் தங்கியிருந்து தினமும் அம்பலவாணனின் ஆனந்த நடனத்தைத் தரிசித்துவந்தார். அங்கிருந்து திருப்புலீச்சுரம், திருநாகேச்சுரம் முதலான தலங்களுக்குச் சென்று தரிசித்து மீண்டும் தில்லை வந்தடைந்தார். தில்லையில் அடிகள் அருளிச் செய்தவை 29. குலாப்பத்து, 30. கோயில் திருப்பதிகம், 31. கோயில் மூத்த திருப் பதிகம், 32. கீர்த்தித் திருவகவல், 33. திருவண்டப் பகுதி, 34. போற்றித் திருவகவல், 35. திருப்பொற்சுண்ணம், 36. திருத்தெள்ளேணம், 37. திருவுந்தியார், 38. திருத்தோள் நோக்கம், 39. திருப்பூவல்லி, 40. திருப்பொன்னூசல், 41. அன்னைப் பத்து, 42, திருக்கோத்தும்பி, 43. குயில் பத்து, 44. திருத்தசாங்கம், 45. அச்சப்பத்து, என்பனவாம்.

புத்தரொடு சமய வாதம்:

மணிவாசகர் தில்லையில் வாழ்ந்துவரும் நாட்களில் சிவனடி யார் ஒருவர் சிதம்பரத்திலிருந்து ஈழ நாட்டிற்குச் சென்றிருந்தார். அவ்வடியார் செம்பொன்னம்பலம், திருவம்பலம், திருச்சிற்றம்பலம் என்ற திருநாமங்களை இடைவிடாது சொல்லிக் கொண்டிருக்கும் இயல்புடையவர். அவர் ஈழம் சென்றிருந்த காலத்தில் ஈழநாட்டில் புத்த சமயம் மேலோங்கியிருந்தது. இவ்வடியாரின் இயல்பைக் கண்ட சிலர் அரசனிடம் சென்று அவரது செய்கைகளை உணர்த்தினர். அரசன் அச் சிவனடியாரைச் சபைக்கு அழைத்து வருமாறு செய்தான். அரசவைக்கு வந்த அடியவர் செம்பொன்னம்பலம், திருவம்பலம், என்று சொல்லிக் கொண்டே தன் இருக்கையிலமர்ந்தார். அரசன் வியந்து இதன் பொருள் யாது? என்று அவரைக் கேட்டான். அவ் வடியார் அதன் சிறப்புக்களை எடுத்துரைத்து `தீயவரும் உள்ளன் போடு இப்பெயரை ஒருமுறை கூறினால் 21,600 தடவை திருவைந் தெழுத்தைக் கூறியதனால் உண்டாகும் பயனை இது தரும்` என்று கூறித் தில்லைப் பெருமானின் சிறப்பை எடுத்துரைத்தனர். அங்கிருந்த புத்தமத ஆசாரியன் சிவனடி யார் கூறுவதைக் கேட்டுச் சினந்து `திரிபிடகம் அருளிய எங்கள் புத்தனைத் தவிர வேறு தெய்வம் உண்டோ? இன்றே நான் தில்லைக்குச் சென்று சைவத்தை வென்று புத்தனே கடவுள் என்று நிலைநாட்டி வருவேன்` என்று சூளுரைத்து எழுந்தான். ஈழத்தரசனும் தன் ஊமைப் பெண்ணையும் உடன் அழைத்துக் கொண்டு புத்தாசாரியனுடன் தில்லைக்குப் புறப்பட்டான். தில்லையையடைந்த புத்தகுரு, அரசன் முதலானோர் திருக்கோயிலையடைந்தனர். அக்கோயில் மண்டபம் ஒன்றில் அமர்ந்தனர். கோயில் காப்பாளர் அவர்களை அணுகி புறச் சமயத்தார் இங்குத் தங்குதல் கூடாது என்று கூறினர். அதைக்கேட்ட புத்தகுரு `யாம் உங்கள் சமயத்தை வென்று எங்கள் சமயத்தை இங்கு நிலைநாட்ட வந்துள்ளோம் என்று வாதிற்கு அறைகூவினான். அச்சூளுரை தில்லைவாழ் அந்தணர்களுக்கு எட்டியது, அவர்கள் சோழமன்னனுக்கு இந்நிகழ்ச்சியை உடன் தெரிவித்தனர். அன்றிரவு தில்லைவாழ் அந்தணர்கள் அனைவரும் புத்தமத குருவை எவ்வாறு வெல்வது என்ற கவலையுடன் தில்லைச்சிற்றம்பலவனை எண்ணி வணங்கித் துயில்கொண்டனர். நடராசப் பெருமான் அவர்கள் கனவில் எழுந்தருளி `தில்லையின் கீழ்பால் சிவயோகத்தில் அமர்ந்து தவமியற்றி வரும் நம் அடியவனாகிய வாதவூரனை அழைத்து வந்து இப்புத்த குருவோடு வாதிடச் செய்க, அவன் அவர்களை வெல்வான்; கவலற்க` என்று கூறி மறைந்தார். மறுநாள் தாம்கண்ட கனவை ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு இறைவன் திருவருளை வியந்து மணிவாசகர் எழுந்தருளியுள்ள தவச்சாலையை அடைந்து மணிவாசகரிடம் ``அடிகளே! நம் சைவ சமயத்தை அழித்து புத்த மதத்தை நிலைநாட்டும் எண்ணத்துடன் ஈழநாட்டு மன்னனும், புத்த மதகுருவும் வந்துள்ளனர். தாங்கள் வந்து அவர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைநிறுத்தல் வேண்டும்`` என்று அழைத்தார்கள்.

ஊமைப்பெண் பேசியது:

வாதவூரடிகளும் தில்லை மூவாயிரவருடன் சென்று ஆனந்தக் கூத்தனை வணங்கி அவனருள் பெற்று புத்தமதகுரு இருந்த மண்டபத்தை அடைந்தார். தீயவர்களைக் காண்பது தீதென்றெண்ணி அவர்களுக்கெதிரே ஒரு திரையிடச் செய்து தான் மறுபக்கத்தில் அமர்ந்தார். சோழ மன்னனும் மறையோரும், புலவர்களும் அவ்வவை யில் கூடியிருந்தனர். சோழன் வாதவூரரைப் பணிந்து, `புத்தர்களை வாதில் வென்று நம் சமயத்தை நிலைபெறச் செய்வது தங்கள் கடமை, தோல்வியுற்ற புத்தர்களை முறைசெய்து என் கடமை` என்று வேண்டிக் கொண்டான். பின்னர் மணிவாசகர் புத்தகுருவை விளித்து `வந்த காரியம் என்ன?` என்று வாதத்தைத் தொடங்கினார். வாதம் தொடர்ந்து நடைபெற்றது. மணிவாசகர் எத்தனை உண்மை களை எடுத்துரைத்தாலும் அவை புத்தகுருவின் செவிகளில் ஏற வில்லை. மணிவாசகர் கூறிய வாதத்தை மறுக்கும் வழியின்றி, சிவ நிந்தை செய்யத் தொடங்கினான். அதைக்கண்ட மணிவாசகர் கலை மகளை வேண்டி சிவநிந்தை செய்யும் நாவில் நீ இருத்தல் பொருந்துமோ? இவர்கள் நாவைவிட்டு அகல்வாயாக; இது இறைவன் ஆணை` என்று கூறினார். அவ்வளவில் புத்தகுருவும், அவருடன் வந்தவர்களும் ஊமைகளாயினர். இதைக்கண்டு வியப்புற்ற ஈழமன்னன் வாதவூரரை வணங்கி `அடிகளே என்பெண், பிறவி முதல் ஊமையாக இருக்கின் றாள். அவளைப் பேசும்படிச் செய்தால் நான் தங்களுக்கு அடிமை யாவேன்` என்று கூறினான். வாதவூரர் அதற்கிசைந்து அப்பெண்ணை அவைக்கு வரவழைத்து அமர்த்தி, பெண்ணே! இப்புத்தன் கேட்ட கேள்விகளுக்கு விடை கூறு என்று கூறினார். அப்பெண்ணும் அனை வரும் வியந்து மகிழும்படி, புத்த குருவின் வினாக்களை மணிவாசகர் தாமே அப்பெண்ணிடம் கேட்க அப்பெண் அதற்கு விடையளித்தாள். அந்த வினா - விடைகள் தாம் 46. திருச்சாழல் என்ற திருப்பதிகமாக அமைந்தது. ஈழமன்னனும் அதைக்கண்டு மகிழ்ந்து மணிவாசகர் திருவடிகளிலே விழுந்து வணங்கிச் சைவஞ் சார்ந்தான். அவையோர் அனைவரும் மணிவாசகப் பெருமானைப் போற்றித் துதித்தார்கள். ஈழ மன்னன் திருநீறும் கண்டிகையும் பூண்டு அடிகளைப் பணிந்து புத்த குருவும், மற்றவர் களும் பேசும் திறம்பெற அருள் செய்ய வேண்டு மென்று வேண்டினான்.

மணிவாசகர் அவர்கள் மீது திருவருட் பார்வையைச் செலுத்தினார். அவ்வளவில் அனைவரும் ஊமை நீங்கிப்பேசும் திறம் பெற்று மணிவாசகரை வணங்கித் தாங்கள் செய்த குற்றத்தை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டனர். புத்தகுருவும் அவரைச் சூழ வந்த அனைவரும் சைவர்களாக மாறினர். மணிவாசக ரும் திருக்கோயிலுக்குட் சென்று சபாநாயகரை வணங்கித் தம் தவச் சாலைக்கு எழுந்தருளினார். இவ்வாறு தவச்சாலையில் தங்கியிருந்த காலத்தில் மணிவாசகர் 47.

திருப்படையாட்சி, 48. திருப்படை யெழுச்சி, 49. அச்சோப் பத்து, 50. யாத்திரைப்பத்து என்ற பதிகங் களைப் பாடியருளினார்.

இறைவன் திருவாசகம் கேட்டு எழுதியது:

இவ்வாறு சிதம்பரத்தில் மணிவாசகர் வாழ்ந்து வரும் நாள் களில், ஒரு நாள் அந்தணர் ஒருவர் அவரிடம் வந்து தான் பாண்டிய நாட்டைச் சேர்ந்தவரென்றும், சிவபிரான் மணிவாசகருக் காகச் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்றும் வியந்து கூறி மணி வாசகர் பல சமயங்களிலும் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.

மணிவாசகரும் அந்தணரை அருகிலிருத்தித் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் சொல்லியருளினார். அந்தணரும் தம் திருக்கரத்தால் அவைகளை எழுதி முடித்து `பாவைபாடிய தங்கள் திருவாயால் ஒரு கோவை பாடுக` என்று கேட்டுக் கொண்டார். அவ்வேண்டுகோளுக்கு இணங் கிய மணிவாசகர் இறைவனது திருவடிப்பேற்றை உட்கருத்தாகக் கொண்ட இனிய கோவையார் என்ற நூலை அருளிச் செய்தார். கேட்ட அந்தணர் அந்த நூலையும் தம் திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னர் அந்தணர் வடிவில் வந்த சிவபெருமான் மறைந்தான். அதைக் கண்ட மணிவாசகர் இப்படித் தன்னை ஆட்கொண்டவர் சிவபிரானே என்பதை அறிந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கித் திருவருளை எண்ணி வழுத்தினார்.

திருவாசக உட்பொருள்:

திருவாதவூரரின் திருவாசகத்தையும், திருக்கோவையையும் தம் கையால் எழுதிய இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி நூலின் முடிவில் `திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து` எனத் திருச்சாத்திட்டுத் தில்லைச் சிற்றம்பலத்தில் வாயிற்படியிலே வைத்தருளினார்.

காலையில் கோயிலில் இறைவனைப் பூசை செய்ய வந்த அருச்சகர் வாயிற்படியில் நூல் ஒன்று இருப்பதைக்கண்டு அதையெடுத்து ஆண்டவனால் இது தரப்பட்டதாகும் என்ற அன்புணர் வோடு பிரித்துப் பார்த்துப் படித்தார். அவ்வேடுகளின் முடிவில் திருவாதவூரர் சொற்படி திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து என்றிருந்ததைக்கண்டு உடல் சிலிர்த்து இறைவன் திருவருளைப் பெறுதற்குரிய நூல்களில் இது தலையானது என்று புகழ்ந்து இந்நூலைப் பாடிய வாதவூரரைச் சென்று கண்டு வணங்கினார். திருவாயிற்படியில் இந்நூல் இறைவனால் வைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சியை அவரிடம் தெரிவித்தார். வாதவூரர் அதைக்கேட்டு திருவருளையெண்ணி வணங் கினார். முடிவில் அந்தணர் அனைவரும் இந்நூலின் பொருளைத் தாங்களே விளக்கம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர், அதற்கு மணிவாசகர் இதன் பொருளைத் தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கின்றேன் என்று சொல்லி அவர்களோடு சிற்சபைக்கு எழுந்தருளினார். அங்கு வந்து `இந்நூற் பொருள் இச்சபையில் எழுந் தருளியுள்ள ஆனந்தக் கூத்தப்பெருமானே ஆவன்` என்று சுட்டிக் காட்டி, அச்சபையில் எல்லோரும் காண மறைந்தருளினார். இவ்வற்புத நிகழ்ச் சியைக் கண்ட அனைவரும் வியந்து மகிழ்ந்து தொழுது போற்றினர். நடராசப்பெருமான் மணிவாசகருக்குத் தம் திருவடிகளிலே இரண் டறக் கலக்கும் பேரின்பப் பேற்றைத் தந்து அவரை ஆட் கொண்டருளினார்.

அடிகள் காலம்:

மணிவாசகர் காலத்தைப் பற்றி ஆராய்ச்சியாளர்கள் பலவேறு கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

ஒவ்வொருவரும் தாங்கள் கருதிய கருத்துக்களை நிலைநாட்டுவதற்கு, பலவேறு ஆதாரங்களைக் காட்டுகின்றனர். எல்லோருடைய ஆராய்ச்சியும் அடிகளார் கடைச் சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 11-ஆம் நூற்றாண்டுவரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒருகாலம் மணிவாசகர் வாழ்ந்த காலம் என முடிவு செய்கின்றது.
மூவர்க்கு முந்தியவர் மணிவாசகர் என்ற கருத்து பொருத்த முடையதாகத் தோன்றுகிறது. மணிவாசகர் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம், பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவர் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மணிவாசகர் வாக்கில் சமண் சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப் பெறவில்லை. இன்ன பல காரணங்களால் மணிவாசகர் மூவர்க்கும் முந்தியவர் என்று கொள்ளலாம். 


      ஓம் நமசிவாய  திருச்சிற்றம்பலம்